கிழவனும் கடலும்
கிழவனும் கடலும், தி ஓல்ட் மேன் அண்டு தி சீ, எர்னெஸ்ட் ஹெமிங்க்வே, தமிழில் எம்.எஸ்., காலச்சுவடு பதிப்பகம்.
எர்னெஸ்ட் ஹெமிங்க்வே ஆங்கிலத்தில் எழுதிய தி ஓல்ட் மேன் அண்டு தி சீ என்ற நாவலை தமிழில், கிழவனும் கடலும் என்ற பெயரில் எம். எஸ். மொழிபெயர்த்து உள்ளார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நோபல் பரிசு பெற்ற நாவல், சினிமாவாகவும் வந்துள்ளது. சமீபத்தில் இந்த நாவலை படித்தேன். ஈராக் அதிபர் சதாம் உசேன் சிறைப்பட்டு இருந்தபோது, கடைசி ஆசை என்ன என சிறை அதிகாரிகள் கேட்டனர். இந்த நாவலை படிக்க வேண்டும் என சதாம் விருப்பம் தெரிவித்து படித்தாராம். புகழ்பெற்ற இந்நாவலின் பலகோணங்களையும், அதன் அற்புதங்களையும், உலக இலக்கியவாதிகள் அனைவரும் விவாதிப்பதோடு, மேற்கோளும் காட்டுகின்றன. கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் கிழவனின் கதையே நாவல். எப்போதும் ஒரு சிறுவனுடன், கடலுக்கு செல்லும் கிழவனுக்கு, எதிர்பார்த்த அளவு மீன் கிடைக்காது. அவன் வாழ்வும் பொலிவு பெறாது. பெரிய மீன் ஒன்று வலையில் சிக்க வேண்டும். அதை விற்று, செழிப்படைய வேண்டும் என்பதே, கிழவனின் நீண்ட நாள் ஆசை. ஒருநாள், தனியாக கடலுக்கு செல்கிறான். பல நாள் உணவின்றி, வலையை விரித்து, பெரிய மீனுக்காக காத்திருக்கிறான். இறுதியில் பெரிய மீன் ஒன்று வலையில் சிக்குகிறது. அதை இழுத்து, படகுக்குக் கொண்டு வர, பெரும் போராட்டத்தை நடத்துவான். கடலில் பல நாள் உணவின்றி இருந்ததால், அவன் உடல் வலு இழந்துவிடும். மீனை இழுக்கும் தெம்பு, உடலுக்கு இல்லாமல் போய்விடும். மீனுக்கும், அவனுக்கும் நடக்கும் போராட்டம், நம் வாழ்வில் நடக்கும் போராட்டத்தை ஒப்பிடுவதாக இருக்கும். வலையில் சிக்கிய மீன், ரத்த காயம் அடையும். ரத்த வாடைக்கு, சுறா போன்றவை வலையில் சிக்கி காயம்பட்ட மீனை தின்னத் துவங்கிவிடும். ஒருவழியாக மீனை இழுத்து கரைக்கு வரும்போது, அதன் சதைப் பகுதிகளை எல்லாம் பிற மீன்கள் தின்றது போக, எலும்பு மட்டுமே மிஞ்சும். வாழ்வில் எவ்வளவோ போராட்டங்கள் நடத்தினாலும், இறுதியில் மிஞ்சுவது எது என்பதை, நாவல் உணர்த்துகிறது. நாவலின் ஒவ்வொரு பதிவும், நம் வாழ்வை உயிரோட்டமாக காட்டுகிறது. லிங்குசாமி, திரைப்பட இயக்குனர். நன்றி: தினமலர், 19/4/2015.