கீழ்க்கணக்கு நூல்களில் கல்விச் சிந்தனைகள்

கீழ்க்கணக்கு நூல்களில் கல்விச் சிந்தனைகள், பத்மகவி குற்றாலதாசன், ஸ்ரீ கிருஷ்ணமணி நிலையம், கன்னியாகுமரி மாவட்டம், பக். 140, விலை 75ரூ.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில், ஆங்காங்கு சுட்டப்பட்டுள்ள கல்வியியல் சிந்தனைகளை எல்லாம் ஒன்றாக தொகுத்து,இக்கால கல்வி செயல்பாடுகளோடு பொருத்திக்காட்டி, இந்த நூலை ஆக்கியிருக்கிறார் நூலாசிரியர். காலத்திற்கு ஏற்ற முயற்சி, பாராட்டத்தக்கது. தனி மனிதனின் மேம்பாட்டிற்கு மட்டுமின்றி, சமூகத்திற்கும் பயன்படக் கூடியதாக, சமூகத்திற்கும் பயன்படக் கூடியதாக, மனமொழி மெய்களால் ஒழுக்கம் உடைய சான்றோரை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் அமைதல் வேண்டும். அந்த நோக்கத்தையே, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சுட்டிக்காட்டுகின்றன என்பதை, பல்வேறு சான்றுகள் மூலம் நூலாசிரியர் நிறுவுகிறார். இன்றைய கற்பித்தல் செயல்பாடுகளில் ஆர்வமூட்டல், தொடர் பணி எனும் படிநிலைகளை, சிந்தனை வாயில், செயல்விழை வாயில் எனும் இயல்களில் எடுத்துக் கூறி, இக்கல்வி நிலையை மேம்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் எனும் தமது கருத்தையும் எடுத்தியம்புவது, அவர் கல்வி மேல் கொண்டிருக்கும் தீராக் காதலைக் காட்டுவதாக உள்ளது. கல்வி கரையில கற்பவர் நாள்சில ஆராய்ந்து அமைவுடைய கற்பவே கல்வியின் முழுமையான நோக்கம் என்ன? இளமைப் பருவத்து கல்லாமை குற்றம் கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான் -போன்ற கீழ்க்கணக்குப் பாடலடிகள், இன்றைய கல்விப் படிநிலைகளாகிய அறிவு, புரிதல், பயனாக்கல், பகுத்தல், தொகுத்தல், சீர்தூக்கல் ஆகியவற்றோடு பொருத்தமுற்று நிற்பதை ஆசிரியர் விளக்கும் பாங்கு அற்புதம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் கல்விச் சிந்தனைகளை, இக்காலச் சிந்தனைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், சிந்தனைகள் ஏறத்தாழ ஒன்றேயாயினும், செயல்படுத்தும் முறையும், செயல்படும் முறையும் மனநிறைவாக இல்லை என, தன் ஏக்கத்தைப் பதிவு செய்துள்ளார். ஆசிரியரும், ஆசிரியராய் வர எண்ணுவோரும் படிக்க வேண்டிய நூல். கல்வியியல் மாணவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டிய நூல். -புலவர் மதியழகன். நன்றி: தினமலர், 9/8/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *