குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை
குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை – கோக்கலை ஜேராஜன்; பக்.224; ரூ.150; மகராணி, சென்னை-101
பத்துப்பாட்டில் எட்டாவதாக வைத்து எண்ணப்படுவது குறிஞ்சிப்பாட்டு. இதை “பெருங்குறிஞ்சி’ எனவும் வழங்குவர். குறிஞ்சி நிலத்தைப் புனைந்து பாடுவதில் வல்லவர் கபிலர். இதனால் “கருதும் குறிஞ்சி கபிலன்’ என்றும் பாராட்டப் பெற்றவர். ஆரிய அரசன் “பிரகத்தன்’ என்பவனுக்குத் தமிழ் கற்பிப்பதற்காகக் கபிலர் இக் குறிஞ்சிப்பாட்டை இயற்றினார் என்பது வரலாற்றுக் குறிப்பு. ஐந்திணையில் மூன்றாவதாக உள்ளது குறிஞ்சி. இத்திணை புணர்தலும் புணர்தல் நிமித்தத்தையும் குறிக்கும். புணர்தல் என்பது ஒத்த தன்மையுடைய தலைவனும் தலைவியும், கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றி தனியே ஒரு பொழிலில் தம்முள் தலைப்பட்டு அன்பால் கூடுவதாகும். ‘அறத்தொடு நிற்றல்’ என்ற துறையில் அமைந்தது இப் பாடல். தலைவியும் தோழியும் சோலையில் பூம்பொழில் ஆடி 99 வகையான மலர்களைப் பறித்து வந்து மாலை தொடுத்ததாகக் கூறுவது இப்பாடலின் தனிச்சிறப்பு. இந்நூலில்தான் முதன் முறையாக 99 வகைப் பூக்களின் பெயர்கள் கூறப்பட்டன. 261 அடிகளில், தமிழர் மேற்கொண்டொழுகிய களவொழுக்கம் முறையாகவும் சுவையுடனும் கூறப்பட்ட இந்நூலுக்கு விரிவான ஆராய்ச்சியுரையும், அருஞ்சொற்பொருள் விளக்கமும் தந்திருக்கிறார் நூலாசிரியர். ‘குறிஞ்சிப்பாட்டில் வரும் ஒவ்வொரு சொல்லுக்கும், அடிக்கும் அந்த அடிக்குத் தொடர்புடைய சொற்கள் இடம்பெற்ற பெருங்கதை, புறநானூறு, திருவாய்மொழி, சிறிய திருமடல், நெடுநல்வாடை, பெரும்பாணாற்றுப்படை, திருமுருகாற்றுப்படை, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, குறுந்தொகை, மூதுரை, சூளாமணி முதலிய பல இலக்கியங்களில் அச்சொற்கள் பயின்று வந்துள்ளதை, மேற்கோளுடன் முன்வைத்துள்ளது மிகவும் அருமை. இத்தகைய ஆய்வு ஆசிரியரின் அயரா உழைப்பையும் ஆராய்ச்சி நுணுக்கத்தையும் நுட்பத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்நூல் வருங்காலத்தில் பல ஆராய்ச்சி நூல்களுக்கு வழி வழிக்கும் என்று துணிந்து கூறலாம். நன்றி: தினமணி – 20-8-2012