கேன்டர்பரிக் கதைகள்
கேன்டர்பரிக் கதைகள், தமிழில் வான்முகில், மீனா கோபால் பதிப்பகம், பக். 175, விலை 200ரூ.
ஆங்கிலக் கவிதையின் தந்தை என்று போற்றப்படுகிற சியாஃபிரே சாசர் என்பவரின் படைப்புகளுள் தலைசிறந்தது கேன்டர்பரிக் கதைகள். 14ம் நூற்றாண்டில் ஆங்கிலம் என்று ஒரு தனி மொழியே இல்லை. இங்கிலாந்தின் வட்டார வழக்குகளை ஒன்று திரட்டி அதனை ஒரு மொழியாக மாற்றி, இங்கிலாந்துக்கு ஒரு தேசிய மொழியை அளித்தவர் சாசர். கேன்டர்பரிக்குப் புனிதப் பயணமாகச் செல்லும் பயணிகள், வழியில் தபார்டு என்ற சத்திரத்தில் தங்கிச் செல்வது வழக்கம். பயணக் களைப்புத் தெரியாமல் இருக்க, ஒவ்வொரு பயணியும் போகும்போது இரு கதைகளும் திரும்பி வரும்போது இரு கதைகளும் சொல்ல வேண்டும். அதில் சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்து, அதைச் சொன்னவருக்கு மற்ற பயணிகள் விருந்து அளிக்க வேண்டும். அவ்வாறு சொல்லப்பட்ட கதைகளே கேன்டர்பரிக் கதைகள். சாசருடன் சேர்ந்து 29 பயணிகள் ஆக 58 கதைகள் சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் நமக்குக் கிடைப்பது 24 கதைகளே. அதை கவிதைகளாக சாசர் வடித்துத் தந்துள்ளார். நம் ஊர் பாட்டி வடை, காகம் நரி கதைகள் எல்லாம் சாசரின் பிற மொழிபெயர்ப்புக் கதைகளில் இருந்து தழுவி எழுதப்பட்டவையே. ஒரு பெரிய ஆய்வுக்குரிய நூலாக இதனை மொழிபெயர்த்துத் தந்துள்ளார் கவிஞர் வான்முகில். நன்றி: குமுதம், 7/12/2015.