கொங்குநாட்டுக் கோயில்கள்
கொங்குநாட்டுக் கோயில்கள், கி.வெங்கடாச்சாரி, பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 252, விலை 225ரூ.
பழந்தமிழகத்தின் மேற்குப் பகுதி கொங்கு நாடு என்று வழங்கப்பட்டது. தமிழகத்தின் பண்பாட்டு வளர்ச்சியில் கொங்கு மண்டலத்தின் பங்களிப்பு முக்கியமானது. ஒரு பண்பாட்டின் வளர்ச்சியில் பேரிடம் வகிப்பவை ஆலயங்களே ஆகும். ஆன்மிகம், கட்டக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் கலவையாக அமைந்துள்ள ஆலயங்கள்தாம் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் வரலாறு கூறும் சாட்சியங்களாக நிற்கின்றன. அந்த வகையில் கொங்கு மண்டலத்திலுள்ள கோயில்கள் குறித்த தகவல்களை ஆவணப்படுத்த பேராசிரியர் கி. வெங்கடாச்சாரி மேற்கொண்ட முயற்சியே இந்நூல். கொங்கு நாட்டுக் கோயில்களின் சிறப்புகளை எதிர்காலத் தலைமுறைக்கு எடுத்துக்கூறும் இந்நூலை அவர் எழுதியிருக்கிறார். தேவாரப்பாடல் பெற்ற கொங்கேழ் தலங்கள், சிறப்பு மிக்க சிவாலயங்கள், திருமால் ஆலயங்கள், பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்கள், குன்றுதோறுமிருக்கும் குமரன் கோயில்கள், பவானி ஆற்றங்கரைக் கோயில்கள் என 50 கோயில்களைப் பட்டியலிட்டு அவை குறித்த எளிய அறிமுகத்தை இந்நூலில் ஆசிரியர் அளித்திருக்கிறார். நூலாசிரியரின் ஓவியத் திறமையால் உயிர்பெற்ற கருவறை மூலவர்களின் படங்களும் இந்நூலுக்குச் சிறப்பு சேர்க்கின்றன. இந்நூலிலுள்ள புகைப்படங்கள் காலவெள்ளத்தில் அழியாதவையாகக் காட்சி தருகின்றன. பேரூர் சாத்தலிங்கர் திருமடத்தின் இளைய பட்டம் மருதாசல அடிகள் ஆசியுரை வழங்கியுள்ளார். வெளியில தெரிய வராத பல கொங்கு நாட்டு ஆவணங்களின் சிறப்பை வெளிப்படுத்தியுள்ள ஆசிரியரின் பணி போற்றுதற்கரியது. இதில் விடுபட்ட கோயில்கள் குறித்து ஆவணப்படுத்த வேண்டியது இன்றைய தலைமுறையினரின் கடமை. நன்றி: தினமணி, 20/5/2013.