கருவேலங்காட்டுக் கதை
கருவேலங்காட்டுக் கதை, ராஜா செல்லமுத்து, கவிதா பப்ளிகேஷன், விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-810-2.html
கல் மரத்தில் பூத்த ஒத்தப் பூ மாதிரி காத்துக்கு விழாமெத் தலையாட்டித் தலையாட்டிப் பேசுச்சு எண்ணை விளக்கு. நம்ம ஊருக்குப் புதுசா ஒரு சோடி வந்திருக்குன்னு ரோட்டச் சுத்தி நின்ன புளியமரமெல்லாம் பூ உதுத்து வரவேத்துச்சு… குடிதண்ணீர்க் குழாயின் கைப்பிடி, காதலன் கைப்பிடியாய் உருமாறும். ஒவ்வொரு அடியும் அவன் கைப்பிடிச்சு நடபப்து போலாகும். அடிமையா வாழ்ந்த காலத்துல நமக்குள்ள ஒத்துமை இருந்துச்சு. எல்லாரும் அடிமையின்னு… அட்சதை எடுத்துக்கிட்ட கூட்டம் வாயில வார்த்தையையும் கையில அரிசையையும் வச்சிட்டுக் காத்திருந்துச்சு… நம்ம தெருவுல சாமி கும்புட்டா அதுக்கு உரு சமீந்தாருதான் குத்து வௌக்கு ஏத்தி வைக்கணுமுன்னு எந்தக் காலத்துல வாழ்ந்த அடிமை சொன்னானோ தெரியல்லே… பக்கத்துக்குப் பக்கம் கதைகளும் ஆரோக்கியமான சிந்தனைகளும் மிளிர ஓர் அற்புதமான கதம்ப மாலையைத் தொடுத்திருக்கிறார், அதுவும் அடர்த்தியாக. ராஜா செல்லமுத்து கவிஞரா, கதை எழுதுகிறவரா? கருவேலங்காட்டுக் கதை மதுப்பழக்கத்தின் கொடுமையைத் தோலுரித்துக் காட்டுகிற ஒரு பயனுள்ள இலக்கியம். இன்றைய தேனி மாவட்டத்துத் தேவாரத்தைக் கதைக்களமாக வைத்துப் பின்னப்பட்ட வாழ்வியல் இலக்கியம் இது. கற்பனை என்பதால் நம்புவது சிரமம். கருவாயனைப்போல் எத்தனையோபேர் ரங்கம்மாக்களைச் சிதைத்துச் சீர்குலைப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கதையின் பிற்பகுதியில் வந்தாலும் மனத்தை வடுகிற நல்ல பாத்திரப் படைப்புக்கள் செல்வமும் செல்வியும். குடியால் கெடுவோம் என்கிற எண்ணத்தை படித்த வர்க்கமே உணராதபோது, பாமரர்கள் புரிந்து கொள்வது எப்படி? சிந்திக்க வைக்கிற கதை. நல்லதங்காள் கதை மாதிரி நாடகமாகப் போட்டால் நிச்சயம் பலன் தரும். சாராயக் கடைகளை மூடுங்கள் என்று கொடிபிடிக்கிறவர்களும் படிக்க வேண்டிய நல்ல நூல். கருவேலங்காட்டுக் குருவிகளுக்கு கௌரவம் அதிகம். எச்சில் சோறு சாப்பிடாது. ஈமக்கிரியைப் படையல் அறவே ஆகாது. என்கிறார் கதாசிரியர். அவற்றைவிடவும் மனிதர்களைத் தரம் தாழ்த்தலாமா என்பதைக் குடிவெறி அரசாங்கங்கள் நினைத்தாவது பார்க்கட்டும். நன்றி: கல்கி, 26/5/2013.