கொண்டலாத்தி
கொண்டலாத்தி, எழுதியவர்: ஆசை, பக்கம் 62, க்ரியா, சென்னை. விலை ரூ. 180 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-722-7.html
புள்ளினங்கள் பற்றி நாற்பத்திரெண்டு எழிலான கவிதைகள், அவைகளில் வெளிப்படும் பறவைகளின் தீவிர ஈடுபாடு, கண்ணையும் மனதையும் கவரும் துல்லியமான புகைப்படங்கள், உள்ளடக்கத்திற்கேற்ற நூல் உருவாக்கம். சுகமான வாசிப்பனுபவம் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்தாலே மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்நூலின் ஆசிரியர், ஆசை என்று கையெழுத்திட்டிருக்கும் ஆசைத்தம்பி, முன்னர் ‘சித்து’ என்ற கவிதைத்தொகுப்பின் மூலம் தமிழ் வாசகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தமிழுக்கு எவ்வளவு நீண்ட கவிதை மரபு இருந்தாலும், தற்கால கவிதைகளில் புள்ளினங்களைப் பற்றிக் கையாளப்படும் தகவல் பல தவறாக இருப்பதைக் காணலாம். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கவியரங்கில் ஒருவர் இரவில் வரும் பறவைகளைப் பற்றியது தனது படைப்பு என்று அறிவித்து வெளவால்களைப் பற்றிய கவிதை ஒன்றை வாசித்தார். சினிமாப் பாடல்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை (“பாலூட்டி வளர்த்த கிளி”). இந்நூலின் ஆசிரியர் ஆசைத்தம்பிக்குப் பறவைகள்பால் உள்ள ஈடுபாடு மட்டுமல்ல, அவை பற்றிய விவரஞானமும் அவரது படைப்புகளில் வெளிப்படுகின்றது. ஒவ்வொரு கவிதை மூலமும் புள்ளினங்களின் உலகிற்குள் எளிதாகப் பயணிக்கிறார். தனது எளிமையான சொல்லாட்சியினாலும் மொழியமைப்பினாலும் ஒரு புதிய தளத்தை தமிழ் வாசகனுக்கு காட்டுகின்றார். ‘கவிதை, வாசகனையும் கவிஞனாக மாறக்கோருகிறது’ என்பார் பெருமாள் முருகன். ஆசைத்தம்பியின் எழுத்துக்கள் அதைத்தான் செய்கின்றன. ஒரு எடுத்துக்காட்டு: செப்படி வித்தை செய்யும் அப்படியே இப்படியும் அப்படியும் இருபுறமும் தலைதிருப்பி அசைவற்று ஆகாயம் அளக்கும் ஆங்கே பசைபோட்டு ஒட்டிய பருந்து. எங்கள் வீட்டின் பின்புறத்தில் எப்போதும் பூத்துக் குலுங்கியபடி ஒரு முருங்கைக்காய் மரம். காலைப்பொழுதில் இம்மரத்தில் இரண்டு அல்லது நான்கு தேன்சிட்டுகள் வரும் அழகைப் பின் வராந்தாவில் அமர்ந்து காபி குடித்தபடி நாங்கள் பார்ப்பதுண்டு. அதே போன்ற ஒரு காட்சியைக் கண்ட ஆசைத்தம்பி அதை ஒரு கவிதையாக்கிப் படைக்கின்றார். பூவிற் சிறியவளே முருங்கைப்பூவே எப்படி ஒளித்தாய் உன்னுள் புள்ளித்தேனை சிட்டிற் சிறியவளே தேன்சிட்டே எப்படி அறிந்தாய் உன் புள்ளிக்கண்களால் புள்ளித்தேனை? உச்சிக்கிளையில் அமர்ந்து குரலெழுப்பும் குக்குறுவான், காக்கையின் கூட்டில் முட்டையிடத் தவிக்கும் பெட்டைக்குயில், ஒப்புப்போலி ஒலிசெய்யும் கரிச்சான் குருவி, தோசை கேட்கும் காகம், கொண்டலாத்தியின் விரிந்து மூடும் கொண்டை போல பல இடங்களில் பட்சிகளின் இயல்புகள், நடவடிக்கைகள் பிம்பங்களாக முன்னிறுத்தப்படுகின்றன… – சு. தியடோர் பாஸ்கரன் நன்றி: உயிர்மை 20-12-12