கொதிக்குதே கொதிக்குதே
கொதிக்குதே கொதிக்குதே, (புவி வெப்பமடைதலும் நாமும்), ஆதி வள்ளியப்பன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 80ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-196-0.html இயற்கையின் சதிக்கு எதிராக மக்கள் போராடிக்கொண்டு இருப்பதுதான் இன்றைய வாழ்க்கை. மழைக் காலத்தில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயில் காலத்தில் மேகம் கருக்கிறது. கரைபுரண்டு ஓடிய காவிரி வறண்டுகிடக்கிறது. மலைப் பகுதிகள் தங்களது ஈரப்பதத்தை இழந்துகிடக்கின்றன. காலைக் காற்றையும் காணோம். மாலைத் தென்றலையும் காணோம். இரவின் குளுமையும் பறந்துவிட்டது. இதுதான் இயற்கையின் சதி என்றால், ஏன் சதி செய்கிறது இயற்கை? மக்கள் மீது அதற்கு என்ன கோபம்? இயற்கைக்குக் கோபம் இல்லை. அதன் வருத்தத்தைத்தான் இப்படி அனுபவிக்கிறோம். அறிவியல், தொழில்நுட்பம், வளர்ச்சி என்ற பெயரால் வந்தவை அனைத்தும் இயற்கையை இம்சிக்க ஆரம்பித்ததன் விளைவுதான், இந்தப் பாழாய்ப்போன பருவநிலை மாற்றங்கள். ஆரோக்கியமான புவியை அச்சுறுத்தலுக்கு உரியதாக இந்த அழிவு அறிவியல் மாற்றியதால்… புவி, கோழிக் குழம்புபோலக் கொதிக்குதே கொதிக்குதே. எந்நேரமும் சுற்றுச்சூழல பற்றியே சிந்தித்துவரும் சூழலியல் ஆய்வாளரான இவர், புவி வெப்பம் அடைந்து வருவதால் ஏற்படும் பாதிப்புகள், அதன் அறிவியல் பின்னணி பற்றி எழுதியுள்ள புத்தகம் இது. உலகம் அழிவின் விளிம்புக்கு வேகமாகத் தள்ளப்பட்டு வருகிறது. இதுவரை சந்திக்காத ஆபத்தான சூழ்நிலையை நோக்கி இந்தப் பூவுலகு நகர்ந்து வருகிறது. இதற்கு மிக முக்கியமான காரணம், பூமி நாளுக்கு நாள் வெப்பம் அடைந்து வருவதுதான். பூமி வெப்பம் அடைவதற்கு மிக முக்கியமான காரணம் கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளிட்ட வாயுக்கள் அதிகமாக வெளியேறுவது. கார்பன்-டை-ஆக்ஸைடைக் கட்டுப்படுத்துவது எப்படி? மின்சாரமும் பெட்ரோலும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளாக எல்லா வீட்டிலும் வாழ்கின்றன. அது இல்லாமல் வாழப் பழகவில்லை மக்கள். இந்த வெப்பமயமாதல் காரணமாக விவசாய வீழ்ச்சி, சுகாதாரக்கேடு, பேரழிவுகள், தண்ணீர் பற்றாக்குறை ஆகியன தொடரும். இந்தப் பேரழிவுகளைத் தடுக்க முடியும். அதற்கு கார்பன் வெளியீட்டைக் குறைக்க வேண்டும். நிலக்கரி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் சார்ந்த அனைத்துப் பயன்பாடுகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். நாட்டின் அடித்தட்டு மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதிப்படுத்த சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைக் கண்டறிய வேண்டும் என்கிறார் ஆதி வள்ளியப்பன். காய்ச்சல் கொதித்தால் அலறுவது மாதிரி, பூமிக் கொதிப்பையும் அச்சத்துடன் உணர்ந்து சிகிச்சைக்கு முன்வர வேண்டும். -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 21/5/2014.