கோட்டை வீடு
கோட்டை வீடு, ம. காமுத்துரை, மருதா, சென்னை, விலை 100ரூ.
காமுத்துரையின் மூன்றாவது நாவல் இந்த கோட்டை வீடு. ஒவ்வொருவரது மனதிலும் இருக்கிற கோட்டை வீட்டிற்கு இந்நாவல் உங்களை அழைத்துச் செல்லும் என முன்னுரையில் காமுத்துரை கூறியிருப்பது உண்மையே. நாவலைப் படித்தவுடன் நமது வீட்டின் வயதான பெற்றோர், தாத்தா, பாட்டி நினைவு வராமல் யாரும் தப்ப முடியாது. மனசை சற்றுப் பிசையத்தான் செய்கிறது. பேரனின் மூலம் கதை சொல்லப்படுகிறது. தாத்தா இறந்த பிறகு ஒரே மகளிடம் வந்து சேரும் ஆயா பற்றிய கதை. ஆயாவிற்கு மனநோய் ஏற்பட்டதிலிருந்து துவங்கி ஆயாவின் குடும்ப வாழ்க்கையை பின்புலமாகவும் நிகழ் சம்பவங்களையும் இணைத்து கிராமத்து, சிறு நகரத்து யதார்த்த வாழ்க்கையை மிக இயல்பான நடையில் காமுத்துரை தந்துள்ளார். கம்பம் நகரத்தில் கோட்டை வீட்டில் பிறந்த ஆயா வீரபாண்டியில் தாத்தா வீட்டில் கடுமையாக உழைப்பதையும், தாத்தா வியாபாரத்தை பார்த்ததோடு மைனராக சுற்றித் திரிவதையும் ஆயாவை அடித்து துன்புறுத்துவதையும் பேரன் பிரபுவின் மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாத்தா சலவைக்காரி காமாட்சியுடன் உறவு வைத்துக் கொள்கிறார். அது தெரிந்ததும் காமாட்சிக்கும் அவளது குழந்தைக்கும் ஆயா உதவி செய்கிறார். வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இந்த நினைவுகளால் மன நோய்க்கு ஆளாகி துன்பப்படுவதை மொத்த குடும்பமும் மிகவும் மனிதாபிமானத்துடன் அணுகுகிறது. அந்த அன்பைத் தாங்க முடியாமல் ஆயா இறந்துவிடுகிறார். இந்தக் கதையின் ஊடாக கிராமத்தின் நிகழ்வுகளையும் பேய், பிசாசு பற்றியும் பல செய்திகளைப் பதிவு செய்கிறார். ஒரு குறுநாவலை முழு நாவலாக நீட்டிப்பதனால் பல உதிரி கதாபாத்திரங்களையும் இணைத்துள்ளார். சித்தப்பா, சித்தி கதையில் ஒட்டாமல் நிற்பது ஒரு உதாரணம். முதல் அத்தியாயம் மட்டுமே எனது முகாந்திரப்படி உருவானது. அடுத்தடுத்த அத்தியாயங்கள் எந்தவிதத் திட்டமிடுதலும் இன்றி தன்னை உருவகித்துக் கொண்டன என காமுத்துரை கூறுவதை ஏற்க முடியவில்லை. சரியான இடத்தில் துவங்கி பழைய நிகழ்வுகளை பேரன் வாயிலாகச் சொல்லி அத்தியாயங்களை சரியாக வரிசைப்படுத்தி நாவலை அமைத்துள்ளார் என்றே தோன்றுகிறது. இந்நாவலை நீங்கள் எந்த இடத்திலிருந்தும் தொடங்கலாம் என காமுத்துரை கூறுவதும் சரியே. நாவல் அத்தகு பாணியில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அது அவர் கூறும் காரணம். ஏனெனில் இது கதை மட்டுமல்ல வாழ்க்கை. வாழ்க்கை என்பது எல்லாக் காலங்களிலுமே ஒரே மாதிரியாகத்தானே இருக்கிறது. தட்ப வெப்ப நிலை மாற்றத்தின்போது மட்டும் வெப்பமாகவோ குளிர்ச்சியாகவோ அல்லது வறட்சியாகவோ, வசந்தமாகவோ தன்மை மாறிக்கொள்ளும். சலவைக்காரி காமாட்சி, பேத்தி தனம், ஆயாவின் மகள், பேரன்கள் கிராமத்து ஜனங்கள், தேனி நகரத்து மக்கள் என பல்வேறு பாத்திரங்களை உருவாக்கி அவர்கள் மூலம் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் காமுத்துரை நேர்மாறாக இந்தக் கருத்துக்களையும் கூறியுள்ளார். இலக்கிய உலகில் விவாதங்கள் நடைபெறட்டும். -வெ. சுந்தரம். நன்றி: செம்மலர், 1/7/2013.