கறுப்புக்குயிலின் நெருப்புக்குரல்

கறுப்புக்குயிலின் நெருப்புக்குரல், மன்னர்மன்னன், முத்துப் பதிப்பகம், விழுப்புரம், பக், 484.

பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு அந்த நூலின் இருந்து சில பகுதிகள் இளமை காலத்தில் ஏற்பட்ட வறுமை நிலை ஒன்றை இப்படிச் சொல்வார் பாவேந்தர்- கூனிச்சம்பட்டு என்ற சிற்றூரில் நான் ஆசிரியராகப் பணிபுரியப் போனேன். அந்த ஊருக்குப் போவதற்கு முன்பே என்னைப் பற்றிய கீர்த்தி எட்டிவிட்டது போலும். புதுவையின் அரசியல் கட்சிக்காரர்கள், என்னைப் பற்றி ஒரு வரலாற்றைக் கூறி வைத்திருந்தார்கள். இந்த நிலையில் வேலை செய்யும் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் என்னிடம் பேசவே அஞ்சினர். ஊரில் சிற்றுண்டி விடுதி இல்லாத காலம். தங்குவதற்கு எவரும் இடம் கொடுக்க முன்வரவில்லை. பள்ளி வகுப்பு முடிந்த உடனே தோப்புப் பக்கம் போய்விடுவேன். இருட்டிய உடனே கோயில் பக்கம் போவேன். அங்கு இருந்த வெற்றிலைப்பாக்குக் கடை ஒன்றில், யாரும் அறியாமல் முறுக்கு வாங்குவேன். காலணாவுக்கு 10 முறுக்கு கொடுப்பார்கள். முறுககை எடுத்துக்கொண்டு கோயில் குளக்கரைக்குச் செல்வேன். முறுக்கை ஒவ்வொன்றாகத் தின்று முடித்து, குளத்து நீரையும் குடித்துவிட்டு, இரவு வெகுநேரம் வரை குளத்துப் படிகளில் படுத்திருப்பேன். பின்னர் பள்ளிக்கு எதிரில் உள்ள தோப்பிலோ, பள்ளிக்கூடத்தின் ஓரத்திலோ படுத்திருப்பேன். விடியலில் மீண்டும் தோப்புக்கு உலா. அங்கேயே குளியல். விடிவதற்கு முன்னரே அடுத்த சிற்றூர் சென்று, கடைக்காரர் விற்கும் கிழங்கு அல்லது ஆப்பக்காரம்மாவிடம் தோசை, ஆப்பம் ஒன்றிரண்டு தின்றுவிட்டுத் திரும்புவேன். பகலில் பெரும்பாலும் முறுக்கு, வடை இப்படி ஏதாவது தின்பேன். இந்த நிலை பல மாதங்கள் நீடித்தது. இதற்குள் ஊர் மக்களிடையே உண்மை துலங்கலாயிற்று. பின்னர் நிலையாக ஒருவர் வீட்டில் உணவு கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. கூனிச்சம்பட்டு சிற்றூரில் முதல்முறையாக நான் தமிழாசிரியராக வந்த போது ஏற்பட்ட இந்தத் துயரம் தேவலாம். இரண்டாவது தடவையாக நான் கூனிச்சம்பட்டுக்கு வரும்போது திருணமாகி, நான்கு குழந்தைகளோடு வந்தேன். அப்போது ஏற்பட்டது சொல்லொணாத்துயரம். நூலாசிரியர் மன்னர் மன்னன் குறிப்பிடுகிறார், அப்போது எனக்கு ஐந்து வயது. என் தமக்கையும், எனக்குப் பின்னர் தங்கையர் இருவரும் என் இளைய தங்கை மணி கைக்குழந்தையாக இருக்கையில் அன்னையார் கருவுற்றிருந்தார். பேறுகாலம் நெருங்கிவிட்டது. தலைமையாசிரியரின் மனைவி எப்போதாவது வந்து கருவுற்றிருந்த அன்னைக்கு ஏதாவது அறிவுரை கூறிச் செல்வதுண்டு. வீட்டில் பெண்மணி ஒருத்தி அன்றைக்கு வேண்டிய உதவிகளைச் செய்துகொண்டிருந்தாள். அவளின் உதவியோடு குழந்தையும் பிறந்துவிட்டது. மருத்துவச்சியை அழைத்துவரப் போன தந்தையார் அந்த உதவி கிடைக்க வழியில்லை என்று திரும்பிவிட்டார். இரண்டு நாளில் அந்தப் பிஞ்சுக் குழந்தை இறந்தேவிட்டது. அன்னையார் துடிதுடித்தார். தந்தையார் ஆறுதல் கூறி, குழந்தையை இடுகாட்டில் அடக்கம் செய்யும் ஏற்பாட்டில் இறங்கினார். நன்றி: ஆனந்த விகடன், 30/4/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *