கோலங்களில் கணிதம்
கோலங்களில் கணிதம், நல்லாமூர் கோவி. பழனி, வனிதா பதிப்பகம், பக்.160, விலை 100ரூ.
கணிதம் கற்பது சிலருக்குக் கற்கண்டு. சிலருக்கு வேப்பங்காய். இந்நூல் வேப்பங்காயையும் கல்கண்டாய் மாற்றுகிறது. ஆம், மிக எளிய கோலங்கள் மூலம் கணித சமன்பாடுகளை விளக்குகிறது. இந்நூலிருந்து யூலர் கோலம் மூலம் இதயக்கமலம் எனும் கோலத்தையும் லுகாஸ் தொடர் மூலம் சதுரக்கோலங்களும் வரையலாம் என்று அறிகிறோம். இந்நூல் படிப்போரின் சிந்தனையைத் தூண்டி கணிதம் குறித்த பயத்தைப் போக்கி, தன்னம்பிக்கையை வளர்க்கும் என்று உறுதியாகக் கூறலாம். -டாக்டர் கலியன் சம்பத்.
—-
புதிய நோக்கில் புறநானூறு, பூவை அமுதன், அருள் பதிப்பகம், பக். 240, விலை 100ரூ.
புதிய நோக்கில் புறநானூறு என்னும் இந்நூல் ஒரு வித்தியாசமான நூல். அரை நூற்றாண்டிற்கும் மேலாக தமிழிலக்கியங்களில் ஆழப் புலமை நிறைந்த தமிழறிஞர், கவிஞர். வாழ்த்துக்கள், உவமைகள், மனித நேயம், வீரம், வர்ணனை, புலவர்கள், நகைச்சுவை, தகவல்கள் என 18 தலைப்புகளில் நூற்றுக்கணக்கான புறநானூற்றுச் சிந்தனைகளை ஆய்வு நோக்கில் பதிவு செய்துள்ள நேர்த்தி நூலாசிரியரது புலமைக்குச் சான்றாய் திகழ்கிறது. புறநானூற்றுப் புலவர் பெருமக்களின் (43) பெயர்களுக்குரிய காரணத்தை விளக்கியிருப்பது (பக். 160-169) சிறப்பாக உள்ளது. குறிப்பாக இலக்கிய ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், சொற்பொழிவாளர்கள் போன்றோருக்கு ஒரு சிறந்த கையேடு. ஒவ்வொரு தமிழ் ஆர்வலரும் படித்து மகிழும் இலக்கியப் புதையல். -குமரய்யா. நன்றி: தினமலர், 2/3/2014.