கோழிப்பாட்டி
கோழிப்பட்டி, ஐ.சிவசுப்பிரமணி ஜெயசேகர், அய்யா நிலையம் பதிப்பகம், தஞ்சாவூர், பக். 128, விலை 100ரூ.
சமகத்தில் புரையோடிக் கிடக்கும் மூட நம்பிக்கைகள், சமூக அவலங்களை இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் வாயிலாகத் தோலுரித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். இந்நூலில் உள்ள சிறுகதைகள் அனைத்துமே கற்பனை அல்ல. நெஞ்சை உலுக்கும் நிஜங்கள். ஒவ்வொரு சிறுகதையைப் படித்து முடிக்கும்போதும் சோகத்தால் மனம் கனத்துப் போகிறது. இந்த நூலில் இடம்பெற்றுள்ள கோழிப்பாட்டி கதையில் கொள்ளி வைக்க ஆம்புளப்புள்ள வேணும் என்று மார்தட்டும் கோழிப்பாட்டி, அதே ஆம்புளப்புள்ளைகளால் துன்புறுத்தப்படும்போது தானே தனக்குக் கொள்ளி வைத்துக்கொள்வது நிஜத்தின் உச்சம். இந்த நவீன சமூகத்திலும் ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் மோசமான நிலை நிலவுவதை நூலாசிரியர் வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படித்தான் ஒவ்வொரு சமூக அவலத்தையும் நூலாசிரியர் துணிச்சலுடன் தோலுரித்துக் காட்டி, இப்படிப்பட்ட சமூகத்திலா நாம் வாழ்கிறோம் என்று நம்மை எண்ண வைக்கிறார். இந்த நூலில் உள்ள அனைத்து சமூக விஷயங்களுமே இன்றைய இளைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. இதனால் இந்த நூலில் உள்ள சில சிறுகதைகளையாவது தேர்வு செய்து பள்ளி, கல்லூரி பாடப்புத்தகங்களில் அரசு இடம் பெறச் செய்தால் நாளை நல்லதோர் சமுதாயம் உருவாவதற்கு அது உதவும் என்பது நிச்சயம். நன்றி: தினமணி, 22/9/2014.
—-
கணக்கு கையேடு, மு. கனகலட்சுமி, சிவசக்தி பதிப்பகம், விலை 140ரூ.
கணக்கு என்றால் கற்கண்டு என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளும்வகையில் எளிதாக கணக்கு பாடத்தை கற்பிப்பதற்கும், மாணவர்கள் புரிந்து கொள்வதற்கான வழிமுறைகள் அடங்கிய பயனுள்ள கையேடாகும். நன்றி: தினத்தந்தி, 17/9/2014.