சகுனி
சகுனி, விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், பக். 543, விலை 410ரூ.
மாபெரும் இந்திய இதிகாசமான மகாபாரதத்தில், சகுனி கதாபாத்திரம் முக்கியமானது. சூது, வஞ்சத்தின் தலைவனாக, சகுனி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். சகுனியின் மறுபக்கத்தை அலசியிருக்கிறார் ஆசிரியர். காந்தார நாட்டுத் தலைவன், காந்தாரியின் மகன், துரியோதனனின் தாய் மாமன் சகுனி என்ற அறிமுகம் சிறப்பாக உள்ளது. தான் கொண்ட சபதத்தை நிறைவேற்ற, பொறுமை காப்பதிலும், திட்டமிடுவதிலும், செயல்படுத்துவதிலும் சகுனி தீர்க்கமானவர் என்கிறார் ஆசிரியர். தங்கையின் வாழ்விற்காக, சகுனி செய்யும் காரியங்கள் அனைத்தையும் வாசிப்பவர் ஏற்கும்படி தர்க்க ரீதியில் விளக்கியருக்கிறார் ஆசிரியர். ஆசிரியர் ‘அக்கிரமங்களையும் ராஜநீதி அனுமதிக்கிறது என்றால், சகுனி செய்தது எதுவும் தவறாகாது; ஏனெனில் அவனும் ஒரு ராஜாதானே’ என்கிறார். புத்தகத்தில், வாக்கியங்கள் இடையே, அடிக்கடி, இரண்டு இரண்டு புள்ளிகள் இடம் பெற்றிருப்பது, வாசிப்பை தடுக்கிறது. சகுனியை முழுமையாக அறிய வேண்டும் என்று உந்துதலில் உருவான இந்த புத்தகம் முக்கிய இடம் பெறுகிறது. -சி. கலா தம்பி. நன்றி: தினமலர், 11/1/2015.
—-
இயந்திரங்கள் இயங்குவது எப்படி?, கவிதா பப்ளிகேஷன், சென்னை, விலை 250ரூ.
அன்றாடம் நம் செயல்பாடுகளில் பல பொருள்கள் இயக்கப்படுகின்றன. அதனால் நம் வேலைப்பளு எளிதாகிறது. நாம் பயன்படுத்தும் பல கருவிகள் அவை எப்படி இயங்குகின்றன என்பதை விளக்கும் நூல். பால்பேனா எப்படி எழுதுகிறது? பாட்டரி விளக்கு எப்படி எரிகிறது? 30-வது மாடிக்கு லிப்ட் செல்கிறதே எப்படி? கடிகாரம் துல்லியமாக மணி காட்டுகிறதே அது எப்படி? டெலிவிஷன், ரேடியோ, ஜெட் விமானம், டெலக்ஸ், டெலிபிரிண்டர், ஜெராக்ஸ் இன்னும் எத்தனையோ சாதனங்கள் நம் வாழ்க்கையை வளமாக்க பயன்படுகின்றன. வெகு சிலருக்கே இத்தகைய சாதனங்கள் எப்படி இயங்குகின்றன என்பது தெரியும். பெரும்பாலோருக்கு இவற்றின் இயக்கம் பற்றி எதுவும் தெரியாது. எனவே, வியக்க வைக்கும் பல தகவல்களை, பல்வேறு இயந்திரங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை பெரியவர்களும், சிறியவர்களும் எளிதாக தெரிந்து கொள்ளும்படி, விளக்கப்படங்களுடன் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் வாண்டுமாமா. நன்றி: தினத்தந்தி, 24/12/2014.