வடலிமரம்
வடலிமரம், ஐரேனிபுரம் பால்ராசய்யா, முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோவில், பக். 124, விலை 80ரூ.
இலக்கியவாதிகளான தகழி, கேசவ, தேவ், வைக்கம் முகம்மது பஷீர் ஆகியோரின் நாவல்களைப் படித்தபோது அடைந்த இலக்கிய இன்பத்தை, இந்த நாவலைப் படித்த போதும் அடைந்தேன். பள்ளிப் பருவத்திலேயே காதலிக்க துவங்குகின்றனர் கதாநாயகன் அனந்தகிருஷ்ணனும், கதாநாயகி சொர்ணாவும். அனந்தகிருஷ்ணனின் தந்தை காதலுக்கு எதிராக நிற்கிறார். ஜாதி ஆதிக்கமும், பண ஆதிக்கமும் காதலர் பாதையில் குறுக்கிடுகின்றன. பள்ளிப் பருவத்திலேயே ஊரை விட்டுப் போய் வேற்றூரில் கல்யாணம் செய்து வாழ்க்கை நடத்துகின்றனர். அங்கும் வந்து காதலர்களைப் பிரிக்கிறார், அனந்தகிருஷ்ணனின் தந்தை. கடைசியில் காதலர்கள் என்ன ஆயினர் என்பதுதான் கதை. அனந்தகிருஷ்ணன், சரத் சந்திரரின் தேவதாசைப் போல் ஒரு சோகச் சித்திரம். சொர்ணாவின் பாத்திரமோ சுடர்முகம் தூக்கி, கோபுரக் கலசமாக மின்னுகிறது. பத்தொன்பது அத்தியாயங்கள் உள்ள இந்த நாவலில், கடைசி அத்தியாயத்தில் பாத்திரப் படைப்பில், பால்ராசய்யா சிகரத்தைத் தொடுகிறது. -எஸ்.குரு. நன்றி: தினமலர், 11/1/2015.
—-
கிறிஸ்த்தவக் காப்பியங்கள், யோ. ஞானசந்திர ஜாண்சன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பக். 514, விலை 225ரூ.
தேம்பாவணியையும், ரட்சணிய யாத்திரிகத்தையும் மட்டும் கிறித்தவ காப்பியமாக பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு, 30 கிறித்தவ காப்பியங்களை அறிமுகம் செய்துள்ளார் நூலாசிரியர். தேம்பாவணிக்கம், ரட்சணிய யாத்திரிகத்திற்கும் இடையிலான கால கட்டத்தில் மட்டும், எட்டு கிறித்தவ காப்பியங்கள் படைக்கப்பட்டு உள்ளன. கிறித்தவ மதத்தை சாராத கண்ணதாசன் போன்ற கவிஞர்களும், கிறித்தவ காப்பியங்களை படைத்துள்ளனர் என்பதை, இந்த நூல் காட்டுகிறது. ஒவ்வொரு காப்பியத்தை பற்றிய அறிமுகத்தையும், சிறந்த பாடல்களையும், காப்பியம் தோன்றிய காலத்தையும் வழங்கி உள்ளதால் இந்த நூலை படித்து முடிக்கும்போது 30 கிறித்தவ காப்பியங்களைப் படித்து முடித்த முழுமை ஏற்படுகிறது. தமிழ் ஆய்வுக்களத்திற்கு இது புதுவரவு. இத்தகைய நூல்கள், எல்லா சமயங்கள் சார்ந்தும் எழுதப்பட வேண்டும், கிறித்தவ இலக்கிய வரலாற்றை எழுதுவோருக்கும், ஆய்வாளருக்கும் இந்த நூல் பெரிதும் துணைபுரியும். -முகிலை ராசபாண்டியன். நன்றி: தினமலர், 11/1/2015.