சங்க இலக்கிய ஆய்வு மாலை
சங்க இலக்கிய ஆய்வு மாலை, பதிப்பாசிரியர் கி.இராசா, பதிப்புத்துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி 620024, பக். 212, விலை 120ரூ.
இத்தொகுப்பில் உள்ள 14 கட்டுரைகளை எழுதியவர்களில், முனைவர்கள் இருவரைத் தவிர மற்ற பன்னிருவரும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள். முதன்முதலில் தி போனே என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் சூழியற் பெண்ணியம். ஆமாம் பெண்ணியம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன சூழியற் பெண்ணியம்? சூழியற் பெண்ணியமும் திணை இலக்கியமும் என்ற கட்டுரையில் இதுபற்றி விரிவாக விளக்கியுள்ளார் கி.இராசா. ஒரே கருத்தை பல்வேறு புலவர்கள் எவ்வாறு வேறு வேறு வகையில் கட்டுகின்றனர் என்பதை பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி கூற்றுப் பாடல்களை அமைப்பியல் நோக்கில் ஆராய்ந்துள்ளார் அ.ஆலிஸ். எட்டுத்தொகை அக இலக்கியத்தில் காந்தள் மலரின் முதன்மை குறித்து விளக்கியுள்ள எட்டுத்தொகை அகப்பாடல்களில் காந்தள் என்ற கட்டுரை தாவரவியல் துறை மாணவர்களுக்குப் பல அரிய செய்திகளைத் தந்துள்ளது. பாரி, ஓரி, காரி முதலிய கடையேழு வள்ளல்கள் பற்றியும் தொண்டையர், அருமன், விச்சி, பொறையன் முதலிய குறுநில மன்னர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும் அக இலக்கியமான குறுந்தொகையில் இடம் பெற்றதைப் பதிவு செய்துள்ளது குறுந்தொகையில் வரலாற்றுக் குறிப்புகள் கட்டுரை. ஆய்வு மாணவர்களின் கட்டுரைத் தலைப்புக்கேற்ப பரந்து விரிந்த ஆய்வு. நன்றி: தினமணி,26/8/2013.
—-
என் அருமை மகனுக்கு (நலமாக வாழ வழி சொல்லும் கதைகள்), என். நடராஜன், ஸ்ரீமாருதி பதிப்பகம், 173, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 190, விலை 80ரூ.
உங்கள் முதல் எதிரி கோபம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு மூன்று கதைகள் இப்படி, 29 கருத்துகளுக்கு, 29 கதைகளைப் படைத்துள்ளார். சிறுவர்களுக்கு அறிவூட்டும் வகையில் எழுதப்பட்டுள்ள கதைகள், ஆசிரியரின் முன் அனுபவம், தன்னம்பிக்கையுமே இந்நூலில் எழுதத் தூண்டியதாக கூறுகிறார். நன்றி; தினமலர், 6/11/2011