சங்க இலக்கிய மாண்பு
சங்க இலக்கிய மாண்பு, பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 186, விலை 85ரூ.
சங்க இலக்கியத்தின் மாண்பும், அதன் ஆளுமை பண்பும், இன்றைய சமூகத்திற்கு ஏற்றவாறு புனையப்பட்டிருக்கின்ற பாங்கும், இளைய தலைமுறை அறிய வேண்டியது அவசியம். சங்க இலக்கியத்தில் கையாளப்பட்டிருக்கும் சொற்கள், பொருள் கடினமாக, நடை சிரமமாக இருப்பதால், அதன் கருத்துக்கள் இன்றைய தலைமுறையை எளிதாக எட்டவில்லை. எனவே, அவை கூறும் அரிய கருத்துக்களை, எளிய தமிழ் நடையில் கட்டுரையாக தந்துள்ளார் ஆசிரியர். ஆழிபெருஞ்சித்திரனாரின் சான்றாண்மையும், கோப்பெருஞ்சோழனின் கவித்திறமும், சங்க சான்றோர்களின் ஆளுமைத்திறனும் இந்த கட்டுரைகள் வழியே நமக்கு புலப்படுகின்றன. இல்வாழ்க்கைக்கு இமாலய படிப்பினை தரும் நற்றிணை பாடல்களின் நயம், இலக்கியம் படிப்பவர்களுக்கு மட்டுமல்ல, இல்லறம் விரும்புவோருக்கும் உதவும். -ஜீ.வி.ஆர்.
—-
தமிழ் இலக்கிய வரலாறு, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், முல்லை நிலையம், பக். 320, விலை 140ரூ.
எந்த இலக்கிய வரலாற்றையும் போல் அல்லாமல், புது இலக்கிய வரலாறாக தெ.பொ. மீனாட்சிசுந்தரனாரால் படைக்கப்பட்டது இந்த நூல். மொழியையும், இலக்கியத்தையும் மிக எளிமையாக நமக்கு உணர்த்துகிறது. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் என்றாலும் அவையும் மனிதனால் படைக்கப்பட்டவை என்ற உண்மையை உணர்த்தி, நம்மை அவற்றிற்கு மிக அருகில் அழைத்துச் செல்லும் தன்மை கொண்டு விளங்குகிறது. திருக்குறளைப் படைத்த திருவள்ளுவரும் மனிதர், நாமும் மனிதர் என்னும் ஒற்றுமையை முதலில் விளக்கி, பின்னர் வேற்றுமைக்குள் அழைத்துச் செல்கிறது. பண்டைய இலக்கியங்களை வாய்மொழி இலக்கியங்களாகப் பாதுகாத்து நமக்கு கொடுத்த மரபினைச் சேர்ந்தவர்கள் பாணர்கள் என்றம் அந்தப் பாணர்கள், பறை அறைவோர் முதலானோர் தற்காலத்தில் இழிவாகக் கருதப்படுவதையும் தெளிவுபடுத்துகிறார் தெ.பொ.மீ. நான்க நிலப்பிரிவு ஐந்து நிலப்பிரிவுகளாக பிரிவானது, ஐந்து திணைப்பிரிவு ஏழு திணைப்பிரிவானது முதலா னதிணைச் செய்திகளை நுணுக்கமாக ஆராய்வதுடன் எளிமையாக தருவது இந்த நூலின் சிறப்பு. எத்தனை தமிழ் இலக்கிய வரலாறு நூல்களைப் படித்திருந்தாலும் இந்த நூலை படித்தால் புதிய அனுபவத்தைப் பெற முடியும் என்பது உறுதி. -முகிலை ராசபாண்டியன். நன்றி; தினமலர், 22/12/13.