சர்வோதய ஆளுமைகள்
சர்வோதய ஆளுமைகள், வீ. செல்வராஜ், அருள்மிகு வீரமா காளியம்மன் கல்வி அறக்கட்டளை, மதுரை, பக். 576, விலை 400ரூ.
காந்தியக் கொள்கையை 11 பெருந்தலைப்புகளில் 138 உள் தலைப்புகளில் மிக மிக எளிமையாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர். சர்வோதய தத்துவத்தை விளக்கும் வகையில் ஜெய்ஜகத் சுவாமிகளும் சிஷ்யர்களும் எனும் தலைப்பில் உழவர், நெசவாளர் உழைப்பை வெளிப்படுத்தும் நூலாசிரியர் களத்து மேட்டுக் காட்சிகளின் மூலம் கிராமப்புற சமதர்ம சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறார். அதன் மூலம் உடல் உழைப்பினால் வாழும் ஒரு பாட்டாளியின் வாழ்க்கையும், உழுது பாடுபடும் ஓர் உழவனின் வாழ்க்கையும், கைத் தொழில் செய்பவரின் வாழ்க்கையுமே சத்திய வாழ்க்கை வாழ்வதற்கு உகந்த உன்னத வாழ்க்கை என்று காந்தியடிகள் சத்திய சோதனை கருத்தை சுட்டிக்காட்டுகிறார். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போலவே நூலெங்கும் இது போன்ற அரிய பல நிகழ்வுகள் மூலம் காந்தியத்தை வெளிப்படுத்தியுள்ளார். சர்வோதயத் திறனாய்வு எனும் தலைப்பின் கீழ் உள்ள என்று மடியுமிந்த அடிமையின் மோகம் எனும் 52 வது கட்டுரையில் ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்த காந்தியடிகளின் கருத்தை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுக்காட்டியிருப்பது எக்காலத்துக்கும் காந்தியத் தத்துவம் நம்மை வழிநடத்தும் என்பதற்கு எடுத்துக்காட்டாகும். கல்வி உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் காந்தியத்தை மறுத்ததால் நாம் அடைந்த பாதிப்புகள் எவை? என்பதை விளக்கி படிப்போரை உணரவைக்கிறார். காந்தியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் அறிவுக்கருவூலம் இந்நூல். நன்றி: தினமணி, 21/12/2014.