அறிவியல் போற்றுதம்
அறிவியல் போற்றுதம், நெல்லை சு.முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 268, விலை 100ரூ.
தினமணி நாளிதழில் நூலாசிரியர் நெல்லை சு.முத்து எழுதி வெளியான அறிவியல் தொடர்பான கட்டுரைகளில் 27 கட்டுரைகளைத் தொகுத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷியா உள்ளிட்ட உலக நாடுகள் விண்ணில் செலுத்திய விண்கலன்கள், ஏவுகணைகள், செயற்கைக்கோள்கள், வானிலை ஆய்வூர்திகள் என சகல விஷயங்களையும், அதற்கான காரண காரியங்களையும் அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. ஒருபுறம் சாதனைகளைப் பட்டியலிடும் நூலாசிரியர், மறுபுறம் அதனால் விளைந்த தீமைகளையும் விவரிக்கத் தவறவில்லை. குறிப்பாக, மாரிலாந்து மாகாணம் பால்டி மோர் ஜான் ஹாக்கின்ஸ் பல்கலைக்கழகத்தினர் மேற்கொண்ட ஆய்வில் மீனவப் பெண்களின் தலைமுடியில் 0.4 சதவீதம் பாதரசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்ற பகீர் தகவலைத் தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் சொல்லத் தவறவில்லை. அறிவியல் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளில் ஆங்காங்கே அவற்றில் நிகழ்ந்த ஊழல்களையும் அம்பலப்படுத்தி சவுக்கடி கொடுத்துள்ளார் நூலாசிரியர். குறிப்பாக ஸ்பெக்ட்ரம் பற்றிக் கூறும்போது அதில் நடைபெற்ற ஊழல்களையும் நையாண்டியாகக் குறிப்பிட்டு விடுகிறார். ஒவ்வொரு கட்டுரையையும் வாசகர்களின் சாதக, பாதகக் கருத்துப் பிரதிபலிப்புகளுடன் தொகுத்து வெளியிட்டுள்ள நூலாசிரியர் பாராட்டுக்குரியவர். நன்றி: தினமணி, 21/12/2014.