மீசை என்பது வெறும் மயிர்
மீசை என்பது வெறும் மயிர், ஆதவன் தீட்சண்யா, சந்தியா பதிப்பகம், விலை 130ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-366-1.html மீசை அலங்காரமா? அதிகாரமா? ஆதவன் தீட்சண்யா எழுதிய மீசை என்பது வெறும் மயிர் என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். சந்தியா பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நந்தா ஜோதி பீம் தாஸ் என்ற கற்பனை கதாபாத்திரத்தை ஒட்டி, நாவல் செல்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அவருக்கு, கல்வி மறுக்கப்படுகிறது. அவர் ஊரை விட்டுச் சென்று கடந்த 1964ல், சுனாமியால் தனுஷ்கோடி அழிந்தபோது, அங்க வசிக்கிறார். சுனாமிக்குப் பின், அங்கிருந்த மக்களோடு இலங்கைக்கு சென்று மலையகத் தமிழராகிறார். அங்கு நிலவும் ஜாதி சண்டைகள், அவரை மேலும் துன்புறுத்துகின்றன. இந்த நிலையில் கப்பல் கேப்டனாக இருக்கும், வெள்ளைக்காரருக்கு பணியாளாகி, அவருடனேயே கப்பலில் சென்று, பல நாடுகளுக்கு சென்றுவிட்டு, இறுதியாக தீவு ஒன்றில் குடியேறுகிறார். அவரை நாவல் ஆசிரியர் சந்திக்கிறார். பீம்தாசின் வாழ்க்கை நூல் ஆசிரியர் அவருடன் நடத்தும் நேர்காணல், பீம் தாஸ் எழுதிய மீசை என்பது வெறும் மயிர் என, மூன்று பாகங்களாக நாவல் செல்கிறது. நாவலில் மீசைக்குத்தான் முக்கியத்துவம். ஒரு காலத்தில், மனிதனின் அலங்காரமாக இருந்த மீசை, பின்னாளில் ஆதிக்கத்தின் சின்னமாக, அதிகாரத்தின் முத்திரையாக மாறியது பற்றி விரிவாகச் சொல்கிறது நாவல். மீசை வளர்க்க அனுமதியில்லாத ஒரு கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள், இடுப்புக்குக் கீழ் மீசை வளர்ப்பதும், அதை அழகாக வைத்திருப்பதும் என வாழ்கின்றனர். இந்த மீசை வளர்ப்பு, அதிகார ஜாதியினருக்கு தெரிய வரும்போது, பெரும் அதிர்ச்சி அடைகின்றனர். மீசையை இடுப்புக்குக் கீழ் வளர்த்து, அதன் மரியாதையைப் போக்கிவிட்டனரே என ஆதங்கப்படுகின்றனர். அலங்கார அம்சமாக இருந்த மீசை, அதிகாரக் குறியீடாக மாறியதால், மீசை வெறும் மயிர் என நிரூபிக்கும் நிலை ஏற்பட்டது என, பீம் தாஸ் கூறுவதாக, நாவல் ஆசிரியர் சொல்கிறார். ஆணின் வீரத்துக்கும், ஆண் ஆதிக்கத்தின் வெளிப்பாடாகவும் இருந்த மீசை, ஜாதி குறியீடாகவும், தாழ்த்தப்பட்ட ஜாதியை அடக்கும் சின்னமாகவும் மாறியதை, புதிய கோணத்தில் சொல்கிறார் நாவல் ஆசிரியர். நாட்டில் தற்போது அதிகரித்து வரும் ஜாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு இடையே, ஒரு மனிதனின் தோற்றத்தை, ஜாதி குறியீடாகக் கொள்கின்றனர். ஆனால் அந்த தோற்றத்தால் ஏற்படும் விளைவுகளை மிக நுட்பமாகச் சொல்கிறது நாவல். -ச. தமிழ்ச்செல்வன். தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம். நன்றி: தினமலர், 4/1/2015.