சர்வோதய ஆளுமைகள்

சர்வோதய ஆளுமைகள், வீ. செல்வராஜ், அருள்மிகு வீரமாகாளி அம்மன் கல்வி அறக்கட்டளை, சென்னை, பக். 576, விலை 400ரூ.

காந்தியம் பைத்தியக்காரரின் திட்டம் தமிழகத்தில் காந்தியத்தின் அருமை பெருமைகளையும், சர்வோதய கருத்துக்களையும் பரப்பியவர், இந்நூலாசிரியர் அமரர் வீ. செல்வராஜ். இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் இயக்கத்தின் தியாகியாகவும், உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், தமிழ்நாடு காந்தி நினைவு நிதி, தமிழ்நாடு சர்வோதய சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும், பல்வேறு வார, மாதஇதழ்களின் ஆசிரியராகவும் விளங்கிய நூலாசிரியர், எழுத்து தெய்வம், எழுதுகோல் தெய்வம் எனும் பாரதியின் வாக்கைக் குறிக்கோளாய் கொண்டு, பல பயனுள்ள கட்டுரைகளை எழுதியவர். அன்னாரின் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இந்நூலில், சர்வோதய தத்துவம், சிந்தனை, செயற்பாடு, அதன் திறனாய்வு, சர்வோதய நிறுவனங்கள், அவற்றின் ஆளுமைகள், அதன் அடிப்படையில் ஆதாரக் கல்வி, சர்வோதய மாற்றம், சர்வோதய ஆன்மிகம், அதன் தேடல் என்ற பல தலைப்புகளில் 138 கட்டுரைகள் உள்ளன. அன்பே தகழியா என்ற ஆழ்வார் பாடலை சர்வோதயத்துடன் ஒப்பிடுவதும் (பக். 61), பாவம் என்ற சொல்லை, நிலை குலைவு என்ற சொல் கொண்டு விளங்குவதும் (பக். 335), நாட்டறம் பள்ளி ராமகிருஷ்ண மடாலயத்தின் சிறப்பும் (பக். 338), நாளந்தா பல்கலைக்கழகத்தின் பெருமையும் (பக். 343) முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பி. ராமசாமி ரெட்டியார் கொண்டு வந்த சமச்சீர் பொருளாதாரம், அரசு அதிகாரிகளால், பைத்தியக்காரரின் திட்டம் என, கைவிடப்பட்டது குறித்தும் (பக். 386), காந்தி, வினோபாஜி, டாக்டர் ஜே.ஸி. குமரப்பா, பெருங்கருணை சீனிவாசய்யங்கார், க. அருணாசலம், ரா. குருசாமி, எஸ்.ஆர்.சுப்பிரமணியம் மற்றும் பலரின் தியாகங்களையும் நூலாசிரியர் எளிய, இனிய தமிழில் கலந்து எழுதி உள்ளார். தற்கால இளைஞர்கள் இந்நூலைப் படித்தால், இந்தியத் திருநாட்டின் வளத்திற்கு, நம் முன்னோர் எப்படியெல்லாம் பாடுபட்டுள்ளனர் என்பதையும், இக்கால அரசியல்வாதிகள் அவர்களுக்கு எப்படி நேர்மாறாக நடக்கின்றனர் என்பதையுட் ஒப்பிட்டு உணர முடியும். சர்வோதயக் கருத்துகளை நன்கறிய இந்நூல் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர்,6/10/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *