சவீதா நாவல்கள்
சவீதா நாவல்கள், சவீதா, நன்னூல் அகம், பக். 1264, விலை 800ரூ.
சுகமான வாசிப்பு அனுபவம் தரும் சவீதா ஒரு அபூர்வமான எழுத்துச் சிற்பி. உளி எடுத்துக் கொஞ்சம், கொஞ்சமாகச் செதுக்குவதுபோல், சொற்களைச் செதுக்கும் ஒரு அபூர்வக் கலைஞன், நிலவின் பாலில் குளிப்பதைப்போலவும், நிர்மலத் தென்றலில் குறிப்பதைப்போலவும், சுகம் தரும் வார்த்தைகளை வர்ணனைகளில் கொண்டு வரும் மாயாவி சுவீதா. இந்தத் தொகுதியில் உள்ள, 18 நாவல்களும், சுகமான வாசிப்பு அனுபவத்தைத் தரும். ‘மலைச் சிகரங்கள் மேகங்களால் கூர் மழுங்கி இருந்தன. மூடுபனி, யூகலிப்டஸ் மரங்களுக்கு இடையே உருகி வழிந்து, ஏரி நீரின் மேல் படர்ந்து நகர்ந்தது. சரிவில், பேரி, பிளம்ஸ், ஏப்ரிகாட் மரங்களின் பனியால் கருகிக் கறுத்துப் போன கிளைகளுக்குள்ளே, கணநேரமும் காத்திருக்க விரும்பாத வசந்தகால வண்ண வண்ணப் பூக்களாக வெடித்தது, பறவைகளின் குதூகலக் கூச்சல். எங்கோ ஒரு நாய், ‘ளப் ளப்’ என்று, மலைப் பிரதேச அமைதியைக் கலைத்தது’(பக். 218). ‘குளிரில் நடுங்கிய மெலிந்து போன நிலவுக்கு, வெள்ளை மேக இழைகள் ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருந்தன’(பக். 373). ‘ஜன்னலின் கண்ணாடிக்கு வெளியே, சோகை பிடித்த கிழக்கிற்குக் காலைச் சூரியன் ரத்த தானம் செய்து கொண்டிருந்தான்’(பக். 932). ‘வானக் குடையில் ஏகப்பட்ட கிழிசல்கள் ஏற்பட்டு விட்ட அடைமழைக் காலம்’ (பக். 933). புதுமையான எழுத்தாளுகை, நவீன உவமைகள், நடையில் பந்தயக் குதிரையின் வேகம். இந்த நாவல்களில் முக்கால்வாசி, திரில்லர், மர்டர், மிஸ்டரி வகையறா! இந்தத் தொகுதியில் கோபுரக் கலசமாக உயர்ந்து ஜொலிப்பது, ‘நேசமுள்ள வான் சுடரே’ எனும் காதல் நவீனம். அணிந்துரையில், ‘கல்கி’யின் முன்னாள் ஆசிரியர் கி.ராஜேந்திரன், இந்தக் காதல் நவீனத்தின் சிறப்பை இப்படிப் புகழ்கிறார். ‘கால் என்றாலே இனக் கவர்ச்சிதான் என்று முடிவு கட்டும் அளவில், இன்றைய பல எழுத்தாளர்கள் அதைக் கொச்சைப்படுத்தி வரும்போது, சவீதா இந்த நாவலில், காதலின் உன்னதச் சிகரங்களைத் தொடுகிறார்’. இந்த நாவலை, சவீதா ஒருசோகச் சித்திரமாகப் படைத்துவிட்டாரே என்று வாசகர்கள் ஏங்கும் அளவுக்கு, இதில் வரும் பாத்திரங்கள் உயிர்த்துடிப்பு மிக்கவை. எழுத்தாளர் சுஜாதாவின் நடை அலங்காரம்போல், சவீதாவின் நடையும் விசேஷத் தன்மை வாய்ந்தது. படித்து அனுபவிக்க நேர்ந்தவர்கள் பாக்கியசாலிகள். நன்றி: தினமலர், 3/1/2016.