சாதேவி
சாதேவி, ஹரன் பிரசன்னா, மயிலை முத்துக்கள், சென்னை, விலை 300ரூ.
விரியும் அக உலகம்!
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023779.html ஹரன் பிரசன்னா எழுதிய 34 சிறுகதைகள் தொகுக்கப்பட்டு சாதேவி என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளன. பெரும்பாலும் சமூகத்தில் வலுவிழந்த மாந்தர்களைப் பற்றியே இக்கதைகள் பேசுகின்றன. மனித உறவுகளின் நுட்பமான இயங்கியலை பதிவு செய்கின்றன. வயதான அம்மாக்கள், குடும்பபாரம் சுமக்கும் மாமிகள், வீட்டு வேலை செய்யும் மாமாக்கள், கணவனை இழந்த விதவைகள், மாற்றுத் திறனாளிப் பெண், மரணத்துக்குப் பிந்தைய குடும்ப நிகழ்வுகள் என ஒரு நுட்பமான உலகை அறிமுகம் செய்கிறது இத்தொகுப்பு. பெண்களின் அக உலகை ஓர் ஆணின் நோக்கிலிரூந்து அறிமுகம் செய்யும் கதைகளாக பெரும்பாலும் இருக்கின்றன. கன்னடம் பேசும் பிராமண வகுப்பைச் சேர்ந்த பாத்திரங்கள் பெரும்பாலும் கதைகளில் இடம் பெறுகின்றன. திருச்செந்தூர் கோயிலில் காணாமல் போன தன் வடிவுப் பெரியம்மையை பல்லாண்டு கழித்துக் காண்பவன், அவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல விரும்புவதும் அதில் ஏற்படும் சஞ்சலங்களும், அந்த அம்மை இறுதியில் எடுக்கும் முடிவும் இத்தொகுப்பில் இருக்கும் சிறந்த கதைகளில் ஒன்றாக அலை என்ற அக்கதையை முன்னிறுத்துகின்றன. கோயில் வாசலில் ஈசல்கள் போல தொப்பைகளுக்குப் பின்னால் ஐயர்கள் ஓடிவந்தனர் என்பது போன்ற வரிகளுக்கு இத்தொகுப்பில் பஞ்சமே இல்லை. வசியம் என்ற சிறுகதை சுவாரசியமாகவும் நுட்பமாகவும் உள்ளது. சிவாஜி வாயிலே ஜிலேபி கதை சிரிக்க வைக்கிறது. கதைகளில் எல்லாவற்றையும் ஹரன் பிரசன்னா வெளிப்படையாகச் சொல்வதில்லை. பலவற்றை வாசகனே உய்த்துணருமாறும் எழுதி உள்ளார். இத்தொகுப்பில் உள்ள எந்த கதையையும் புறக்கணிக்க இயலாது என்றே கூற வேண்டி இருக்கிறது. சிறந்த சிறுகதைகள் நிரம்பிய தொகுப்பு. நன்றி: அந்திமழை, 1/7/2015.