சாதேவி

சாதேவி, ஹரன் பிரசன்னா, மயிலை முத்துக்கள் வெளியீடு, பக். 359, விலை 300ரூ.

ஒன்றை ஒன்று முந்தாத புனைவும் தரவும்! புனைவுகளில் கவிதைக்கும் நம்மிடம் இருக்கும் ஆர்வம் சிறுகதைகளில் இருப்பதில்லை. இந்த சூழ்நிலையில் ஆர்வமாக எழுதி வரும் புதிய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களில் முக்கியமானவர் ஹரன்பிரசன்னா. இது அவருடைய முதல் தொகுப்பு. பால்யத்துக்கு சென்று வரும் ‘வயது’, மனநல மருத்துவமனைகளின் குரூர முகங்களை சொல்லும், ‘மீண்டும் ஒரு மாலைப் பொழுது’, தமிழ் பெண்ணை காதலிக்கும் மலையாளியின் பயங்கள் கொண்ட‘ ஒரு காதல் கதை‘, இரண்டு ஆசிரியர்களின் உணர்வுகளை சொல்லும் ‘சிவாஜி வாயிலே ஜிலேபி’ உள்ளிட்ட 34 சிறுகதைகள் இதில் உள்ளன. வடிவ நேரத்தியிலும், உள்ளடக்கத்திலும், தாயம் இத்தொகுப்பில் முக்கியமான சிறுகதை. இரண்டு வெவ்வேறு காலகட்ட நிகழவுகளை, ஒரு புள்ளியில் சந்திக்க வைத்து, கதை சொல்லும் முறை பழையதாக இருந்தாலும், இந்த கதைகயில் புதியதொரு தரிசனம் கிடைக்கிறது. புதிய மொழிநடையில் காட்சிகள் விரிந்து, ஒரு இடத்தில் முடியும்போது, நம்மையும் அறியாமல் ஒருவித சோகம் மனதில் விழுகிறது. இதுபோன்ற இடங்களில்தான் படைப்பின் வெற்றி நிகழ்கிறது. அதைப்போலவே சாதேவி! இரண்டுமே தத்தம் துணையை இழந்து தவிப்போரின் உள்மன எண்ணங்கள். வயதான தம்பதிகளின் பேரன்பும் துணையில்லாத தவிப்பும் வாசகனை கலங்கச் செய்கின்றன. பல கதைகளில், தமிழுக்கு பெரிய அளவில் பரிச்சயமில்லாத கன்னடம் பேசும் மாத்வ சமூகத்தின் வாழ்வியல், பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக, அவர்களின் தாலி அறுக்கும் சடங்கு தமிழுக்கு முற்றிலும் புதிது. புனைவோடு சேர்ந்த தரவும், தரவோடு சேர்ந்த புனைவுமாக ஒன்றை ஒன்று முந்தாமல், சம அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கு துவங்க வேண்டும் என்பதை விட, எங்கு முடிக்க வேண்டும் என்பதில் நேர்த்தியை கையாண்டிருக்கிறார். ஒருபுறம் திருநெல்வேலி பிராமணத் தமிழும், மறுபுறம் கன்னடமும் தமிழும் கலந்து பேசும் பேசும் மொழியும் அழுத்தமாக உள்ளது. எல்லாவற்றையும் தாண்டி, நகைச்சுவை பல இடங்களில் ஆழமாக இழையோடுகிறது. மரணம், சிவாஜி வாயிலே ஜிலேபி, மேல்வீடு உள்ளிட்ட கதைகளை சொல்லலாம். நல்ல மொழிநடை, இயல்பான எழுத்து, இருந்தாலும் அதிகளவில் மேல்தட்டு வாடை அடிக்கிறது. அதெல்லாம் சரி, பொதுவுடைமை கொள்கைகளை ஏற்றுக்கொண்டோருக்கு காதல் அனாவசிய விஷயமா ஹரன் பிரசன்னா? -மகிழனி. நன்றி: தினமலர், 22/11/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *