சிந்தனை ஒன்றுடையாள்
சிந்தனை ஒன்றுடையாள், கே.எஸ். சுப்ரமணியன், அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு.
மனிதனின் அடையாளம் எது? ஆசிய வளர்ச்சி வங்கியில் இயக்குனநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற, கே.எஸ். சுப்ரமணியன் எழுதி, அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியிட்டுள்ள, சிந்தனை ஒன்றுடையாள் என்ற நூலை சமீபத்தில் படித்தேன். மனிதனுக்கு, பெற்றோர், ஜாதி, மதம், நாடு, மொழி என பல்வேறு அடையாளங்கள் உள்ளன. இவற்றில், மொழி மட்டுமே இறுதியில் நிற்கிறது. ஆனால் மொழியும் அடையாளம் அல்ல. சிந்தனைதான் ஒருவரின் அடையாளம் என்கிறது இந்த நூல். அந்த வகையில், சமஸ்கிருதம், தமிழ் இரண்டும், மொழி, கருத்து, தத்துவ வேறுபாட்டு அடையாளங்களை கொண்டு இருந்தாலும், சிந்தனையில் ஒத்த அடையாளம் கொண்டவை என, நூலாசிரியர் கூறுகிறார். இதை உறுதிப்படுத்த, சமஸ்கிருத மொழியில் உள்ள வேதங்கள், காப்பியங்கள், நாடகங்கள், கீர்த்தனைகள் ஆகியவற்றோடு, தமிழின் பக்திப் பாடல்கள், காப்பியங்கள் முதல், தற்கால எழுத்தாளர்களின் நூல் வரை ஒப்பிடுகிறார். சமஸ்கிருத வாக்கியங்களை தமிழிலேயே எழுதி, அதற்கு ஒத்த கருத்துடைய தமிழ் வாக்கியங்களையும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் பாடல்களை எளிதில் புரிந்துகொள்ள அவற்றுக்கான பொழிப்புரையையும் தந்துள்ளார். பிரபஞ்சம், மனிதநேயம், இறை தத்துவம், வாழ்வியல் கூறுகள், இல்லறம், பெண்ணுலகம், காதல், பிரிவாற்றாமை, அரசு, அறிவியல், அழகியல், இலக்கியம் என்பன உள்ளிட்ட 16 பகுதிகளாக இந்நூலை பிரித்துள்ளார். சான்றோரின் குணநலன் குறித்துக் கூறுகையில், கற்பூரம் எரியும்போதும் நறுமணத்தையே தருகிறது என சுட்டிக்காட்டி அதற்குரிய சமஸ்கிருதம் மற்றும் தமிழ் சிந்தனைகளை குறிப்பிடுகிறார் நூல் ஆசிரியர். அதேபோல, நல்ல நட்பின் மகத்துவத்தைக் குறிப்பிடவும், இரு மொழிகளிலும் உள்ள உதாரணங்களை சுட்டிக்காட்டுகிறார். தற்போதைய சூழலில், மனிதனின் அடையாளமான சிந்தனை பற்றி, சமஸ்கிருதமும், தமிழும் கொண்டுள்ள ஒத்த கருத்துகளை, அனைவரும் அறிய, இந்த நூல் முக்கியமானது. -ம. ராசேந்திரன். (முன்னாள் துணைவேந்தர், தஞ்சை பல்கலைக்கழகம்), நன்றி: தினமலர், 15/11/2015.