சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்
சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள், நீதி கேட்ட நிரபராதி சிறைக்குப் போன கதை, செந்தமிழ்க்கிழார், நர்மதா பதிப்பகம், பக். 432, விலை 200ரூ.
கவிதையையும், இலக்கியத்தையும் விரும்பிய, அதிகம் படித்திராத சமூக ஆர்வலரான செந்தமிழ்க்கிழார் தனது சிறை அனுபவங்களைத் தொகுத்து புத்தகமாக எழுதியிருக்கிறார். 1997-இல் தமிழகத்தையே உலுக்கியது சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கு. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூத்த மாணவர் ஜான் டேவிட்டை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது தொடர்பாக, செந்தமிழ்க்கிழார் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். இதற்காக மன்னிப்பு கேட்டால் விடுதலையாகி இருக்கலாம் என்பதை அறிந்தும், மன்னிப்புக் கேட்காமல், 6 மாதம் சிறை தண்டனை பெற்று சென்னை, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு நேர்ந்த பிரச்சனைகள், அவமானங்களைப் பதிவு செய்துள்ளார். இதோடு, கைதிகள் தண்டனை பெற்ற விதம், அவர்கள் செய்த குற்றங்கள், அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றி இந்நூலில் சித்திரித்துள்ளார். சிறைத் தண்டனை பெற்றவர்கள் எல்லாம் தவறு இழைத்தவர்கள் என்று கூறிவிடவும் முடியாது என்ற எண்ணம் ஏற்படுகிறது. வழக்குரைஞர்கள்தான் வாதாட வேண்டும் என்பதில்லை, சாமானிய மனிதனும் தனக்காகவும், பிறருக்காவும் ஆஜராகி வாதாடாம் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. சிந்திக்க வைத்த சிறை அனுபவங்கள். நன்றி: தினமணி, 24/8/2015.