சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை
சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை, மீனாட்சி புத்தக நிலையம், பக்.336, விலை 300ரூ.
தினமணியில் 2000-2001இல் தொடராக வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக மலர்ந்திருக்கிறது. இன்று மக்களுடைய மனதை ஆட்டிப் படைக்கும் காட்சி ஊடகத்தின் தொழில் நுட்பங்களை மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் இந்நூல் விளக்குகிறது. சின்னத் திரைக்காக ஒரு காட்சியைப் படம் பிடிப்பது என்பது அவவ்ளவு எளிதானதல்ல என்பதை இந்நூலைப் படிக்கும் யாரும் உணர முடியும். ஷாட்-இல் எத்தனை வகைகள் உள்ளன? எடுக்கப்போகிற காட்சிக்கு ஏற்ப கேமரா கோணம் எப்படி மாறுபடுகிறது? ஒருவரை உயர்வாகக் காட்ட தாழ்கோணத்திலும், துன்பம், அவலம் இவற்றைக் காட்ட உயர்கோணத்திலும் படம் பிடிக்க வேண்டும். திருமணத்தை உயர்கோணத்தில் படம் பிடிக்கக் கூடாது என்று இந்நூல் விளக்குகிறது. அதுபோல மகிழ்ச்சியான உணர்வைப் புலப்படுத்த வெளிச்சமும், துக்கத்தைக் குறிக்க இருட்டும். திகில் உணர்வை ஏற்படுத்த இயல்புக்கு மாறான ஒளியும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. காட்சி அமைப்பு எப்படி இருக்க வேண்டும்? கேமரா நகர்வுகள் எப்படி இருக்க வேண்டும்? படத்தயாரிப்புப் பணிகளைச் செய்வது எப்படி? படம் எடுத்து முடித்த பின்பு செய்யப்படும் எடிட்டிங், பின்னணி இசை ஆகியவை பற்றியும் விளக்கும் இந்நூல், காட்சி ஊடகத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினமணி, 4/1/2016.