சிறகை விரிக்கும் மங்கள்யான்
சிறகை விரிக்கும் மங்கள்யான், தந்தி பதிப்பகம், பக். 256, விலை 180ரூ.
கையருகே செவ்வாய் 2013ம் ஆண்டு நவம்பர் 5-ந் தேதி பூமியில் இருந்து மங்கள்யான் செயற்கைக்கோள், செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. இந்த நிகழ்வுகளை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, அறிவியல் திறனோடு எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் வகையில் நேர்முக வர்ணனை செய்வதைப் போல தினத்தந்தியில் தொடர் கட்டுரையாக எழுதி வந்தார். செவ்வாய்ப் பயணம் ஏன்? செயற்கைக்கோள் பற்றிய தகவல்கள், செயற்கைக்கோளின் வடிவமைப்பு, பயண வழியைத் தேர்ந்தெடுப்பது எப்படி? செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? போன்ற பல்வேறு தலைப்புகளில் 48 வாரங்கள் வாசகர்களின் கையைப் பிடித்துக்கொண்டு செவ்வாய் கிரகத்திற்கே அவர் அழைத்துச் சென்றார். சரியான பயண நேரம், சரியான பயண பாதை, எரிபொருளைச் சேதம் செய்யாத சிக்கனச் செயல்பாடுகளால் செவ்வாயை அடைந்த செய்திகளைச் சுவைபட எடுத்துச் சொன்னார். அந்தத் தொடர் எல்லா தரப்பினரையும் குறிப்பாக மாணவர்களை பெரிதும் கவர்ந்தது. அது இப்போது சிறகை விரிக்கும் மங்கள்யான் – கையருகே செவ்வாய் என்ற தலைப்பில் தந்தி பதிப்பகம் சார்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் அரிய வண்ணப்படங்கள் நூலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. அறிவியல் தமிழை படித்தவர் முதல் பாமரர் வரை அறிந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்பதே எனது எழுத்தின் லட்சியம் என்று மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். அதை அவர் தனது அறிவார்ந்த எழுத்துகளால் சாதித்திருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 8/7/2015.
—-
புதுக்கவிதை பூக்கள், எஸ்.ஐ.சி. பதிப்பகம், திருநெல்வேலி, விலை 80ரூ.
நூல் ஆசிரியர் சு.ஐ. செல்லையா, காந்திய தொண்டர், போர் எதிர்ப்பாளர். ஏற்கனவே போரும் மனித வாழ்வும் எனும் புத்தகம் படைத்த அவர், இந்நூலில் கவிதை வாயிலாக போருக்கு எதிராக சொற்போர் புரிந்துள்ளார். தன்னை அழிக்க தானே ஆயுதம் செய்வது என்ன புத்தியோ, இவன் கற்றதென்னவோ? என வினா தொடுக்கும் அவர் வாழ்வியல் சிந்தனைகளையும் கவிதைகளாக வடித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 8/7/2015.