சிவசங்கரி குறுநாவல்கள் தொகுதி 8

சிவசங்கரி குறுநாவல்கள் தொகுதி 8, சிவசங்கரி, வானதி பதிப்பகம், சென்னை, பக். 344, விலை 175ரூ.

எழுத்தாளர் சிவசங்கரி தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். இதுவரை 150 சிறுகதைகள், 30 நாவல்கள் எழுதியுள்ளார். அவர் எழுதிய கதைகளில் ஒரு மனிதனின் கதை, நண்டு, அம்மா சொன்ன கதைகள் ஆகியவை இன்றும் அவரது எழுத்துக்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன. பொதுவாக அவருடைய கதைகளில் சமூகச் சிந்தனைகள் மேலோங்கி நிற்கின்றன. போதைப் பொருளுக்கு அடிமையாவது, மதுவுக்கு அடிமையாவது ஆகியவற்றைத் தன்னுடைய எழுத்துக்கள் மூலம் தொடர்ந்து கண்டித்து வருகிறார். முதுமை சார்ந்த பிரச்னைகளிலும் அக்கறையுள்ளவர். இவை எல்லாமும் அவருடைய குறுநாவல் தொகுப்பான இந்நூலிலும் பிரதிபலிக்கின்றன. இந்தத் தொகுதியில் சியாமளா, மண்குதிரைகள், கண் கெட்ட பின், குழப்பங்கள், இவளும் அவளும், தீர்வு ஆகிய ஆறு குறுநாவல்கள் இடம் பெற்றுள்ளன. சியாமளாவில் மனிதனுக்கும், விலங்குக்கும் இடையிலான உறவை, உயிரோட்டமாக வழங்கியுள்ளார். இந்த குறுநாவல்கள் அனைத்தும் வெவ்வேறு கதைக் களன்களைக் கொண்டுள்ளன. மண் குதிரையில் கல்யாணியின் பாத்திரம் உண்மையில் நம்மை அடுத்தது என்ன? என்ற ஆவலைத் தூண்ட வைக்கிறது. அவள் ஒவ்வொரு தருணத்திலும் கணவனுக்காக ஏன் பயப்பட வேண்டும்? தேவையில்லையே என்பதைக் கதையின் இறுதியில் கூறி நமக்கு ஆறுதல் தருகிறார். குறிப்பிடத்தக்க சிறந்த குறுநாவல்களின் தொகுப்பு. நன்றி: தினத்தந்தி, 28/5/2014.  

—-

சருமநோய்கள், மருத்துவர் ஜெ.பாஸ்கரன், நியூ ஹாரிசன் மீடியா, சென்னை, விலை 75ரூ.

மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய தோல் நோய்களின் வகைகள் என்னென்ன? என்னென்ன காரணங்களால் தோல் நோய்கள் ஏற்படுகின்றன? தொழு நோய் படைக்கும், தோலில் ஏற்படும் பிற படைகளுக்கும் என்ன வித்தியாசம்? பொடுகு, பேன் மற்றும் முடிகளில் ஏற்படும் பாதிப்புகளும், தோல் நோய்கள்தானா? ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு தோல் நோய்கள் தொற்றக்கூடியவையா? என்பது உள்ளிட்ட, தோல் தொடர்பான அனைத்து விதமான சந்தேகங்களுக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 28/5/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *