சீர்திருத்தச் செம்மல் இராமானுஜர்

சீர்திருத்தச் செம்மல் இராமானுஜர், கவிஞர் இளங்கண்ணன், ராமையா பதிப்பகம், பக். 320, விலை 160ரூ.

‘அந்தணரானாலும் அன்பால் அனைவரையும்/சாந்தமாய்க் கொண்டநல் ஆத்திர தாரியம்/சீரார் இராமானுசர்த் தொண்டைச் சிந்தை கொள்/ஓராயிரத் தாண்டாம் வாழ்த்து’ என்னும் வாழ்த்துடன் துவங்கும் நூலாசிரியர், 36 தலைப்புகளில், ராமானுஜரின் வரலாற்றை சிறுசிறு தலைப்புகளில், தக்க திருக்குறள் மேற்கோள்களுடன், வைணவச் சுவை குன்றாமல் திறம்படத் தந்துள்ளார். ‘அங்கத்தில் பஞ்ச சம்ஸ்காரம் தரித்தவரே அய்யங்கார். அது சாதியன்று (பக். 75). ஒருவன் தன் சமயத்தில் குற்றங்களைக் கண்டுபிடித்துத் தூற்றுவது மிகவும் கீழ்த்தரமான செயல் (பக். 98), ராமாஜனர், செந்தமிழ்ப் பாடுவார் வீதி என்று ஒரு திருவீதியை திருவரங்கத்தில் ஏற்படுத்தினார் (பக். 125), ஜாதிகளை ஒழிக்க ஒரே வழி எல்லாரையும் வைணவர்கள் ஆக்கிவிடுவதுதான் (பக். 212) என, ஏராளமான புரட்சிக் கருத்துக்களை விதைத்தவர் ராமானுஜர். பொருத்தமான திவ்ய பிரபந்தப் பாடல்களும், கக்கன், தில்லையாடி வள்ளியம்மை போன்றோரின் சமகாலச் சிந்தனைகளும், நூலுக்கு அணியாக உள்ளன. அச்சுப் பிழைகள் அடுத்த பதிப்பிலாவது தவிர்க்கப்படுதல் நல்லது. -பின்னலூரான். நன்றி: தினமலர், 24/1/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *