சீறாப்புராணம்

சீறாப்புராணம்(மூலமும் உரையும்), உமறுப்புலவர், உரையாசிரியர் செய்குத் தம்பி பாவலர், யுனிவர்ஸல் பப்ளிகேஷன்ஸ், முதல் பாகம் பக். 850, விலை 500ரூ, இரண்டாம் பாகம் பக். 968, விலை 600ரூ.

ஒப்பாரும் மிக்காருமற்ற தன்னிகரில்லாத் தலைவராக, முகமது நபியை சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதே சீறாப்புராணம். தமிழ் இலக்கியத்தில் கம்பராமாயணம் ஏற்படுத்திய தாக்கத்திற்குப் பிறகே பல சமய காப்பியங்கள் உருவாகின. அந்த வகையில் சீறாப்புராணமும் மதம் கடந்து தமிழ் இலக்கியவாதிகளால் வாசிக்கப்பட்டு வருகிறது. புராணத் தலைவரின் பெருமைகளையும், அற்புதங்களையும் கூறும்போதுஅதனுடனே, தமிழ் மொழியின் செறிவையும், வளத்தையும் பாடல்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர். செய்யுள், பொழிப்புரை, பதவுரை என தமிழ்ப் புலவர் முதல் பாமரர் வரை, அனைவரும் எளிதில் கற்கும் வகையிலே நூல் அமைந்திருக்கிறது. காப்பு, கடவுள் வாழ்த்து என புராண மரபுக்கு உள்பட்டு, தமிழில் தனக்கிருக்கும் ஆழ்ந்த ஆய்வு நுட்பத்துடனும், இயற்கையாக அமைந்த மொழி வளமையுடனும் சீறாப்புராணத்தை சமயம், மொழி, கடந்து படிக்கும் ஆர்வத்தைத் துண்டியிருப்பது உமறுப்புலவரின் தனிச்சிறப்பு. உமறுப்புலவரின் செய்யுளுக்கு அப்படியே உணர்வும், உண்மையும் மாறாது உரையெழுதியிருக்கிறார் செய்குத்தம்பி பாவலர். உமறுப்புலவர் கையாண்டுள்ள உவமானம், உவமேயங்கள் எல்லாம் படிப்போரை பரவசப்படுத்துவதாக உள்ளன. விலாத்துக்காண்டம் நாட்டுப் படலத்தில் உழவர்களுடைய செய்கையை விவரிக்குமிடத்து, மதயானைக் கூட்டம்போல வயல்வெளிகளை அவர்கள் நெருங்கியதாகக் குறிப்பிடுகிறார். இப்படியே நூலெங்கும் எளிய வாழ்வியல் விளக்கங்களை வைத்து புராணத்தைக் கொண்டுசென்றுள்ளார். மத தலைவரின் வாழ்வையும்,அவர் வழங்கிய அறக்கொடைகளையும் மொழி வழியாக எத்தலைமுறைக்கும் பொருந்தும் வகையில் பாடிய உமறுப்புலவரையும், அதற்கு எவரும் விளங்கும் வகையில் உரையெழுதிய செய்குத்தம்பி பாவலரையும், அவர்களிருவர் பணியையும் இளந்தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையில் தற்காலத்துக்கு ஏற்ப பதிப்பித்துள்ள பதிப்பாளரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். நன்றி: தினமணி, 2/11/2015./

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *