சுந்தரி
சுந்தரி, வ.ரா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, பக். 256, விலை 150ரூ.
தமிழ் வசன நடையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய முன்னோடியும் மணிக்கொடி ஆசிரியருமான வ.ரா. எழுதிய நான்கு நாவல்களில் இதுவும் ஒன்று. சுந்தரி ஓர் அற்புதமான நவ இலக்கிய பொக்கிஷம். எனக்கு இலக்கியப் பிரக்ஞை ஓரளவு உண்டானதாக நான் மதிக்கும் காலத்துக்குப் பின்பு, ஒரே மூச்சாய்ப் படித்து முடித்த நாவல்கள் நாலே நாலுதான். அதில் ஒன்று சுந்தரி என்ற நூலுக்கு முன்னுரை அளித்துள்ள தி.ஐ.ர. குறிப்பிட்டுள்ளார். நாவலில் வரும் அத்தனை பாத்திரங்களும் உயிர் துடிப்புடைய பாத்திரங்கள். வேதாந்தம், கந்தன் இருவரும் நம் வணக்கத்துக்கு உரியவர்கள். வடிவேலு உணர்ச்சியின் பிரதிநிதி. அமிர்தம் நமது உள்ளத்தைக் கொள்ளும் பாத்திரம். நகைச்சுவை, காதல், சோகம், கம்பீரம் என பற்பல உணர்ச்சிகள் நிறைந்த படைப்பு. ஆங்காங்கே பாத்திரங்களின் உரையாடல் வழியே வாழ்க்கையை உயர்த்தும் லட்சியங்களுக்கு உருக்கொடுத்து அவற்றில் பற்று வரச் செய்திருப்பது நூலாசிரியரின் ஆழ்ந்த திறமைக்குச் சான்று. 1917ஆம் ஆண்டு முற்பகுதியில் வெளியான இந்த நாவல், வேதனை நிறைந்த உணர்ச்சிக் களஞ்சியமான ஓர் ஆத்மாவின் சிருஷ்டி. ஒரு கற்பனை இலக்கியத்தின் அனைத்து லட்சணங்களும் கூடிய இந்த படைப்பு பல்வேறு மூடத்தனங்களைச் சிதறியோட செய்யும் அபூர்வக் கருத்துகள் நிரம்பிய நவீனம் என்றால் அது மிகையல்ல. நன்றி: தினமணி, 12/10/2015.