இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள்
இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 700ரூ
கி.பி. 1741- ஆம் ஆண்டுகளில் குளச்சலில் மார்த்தாண்ட வர்மா ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியதில் ஆரம்பித்து கி.பி. 1859ஆம் ஆண்டு வரையிலான இந்தியச் சுதந்திரப்போர் குறித்த பல்வேறு தகவல்களை நூலாசிரியர் தேதி வாரியாகத் தொகுத்தளித்துள்ளார். இந்திய சுதந்திரப் பெரும்போரில் பங்கேற்ற முஸ்லிம் மன்னர்கள், சிப்பாய்கள், தளபதிகள், இளவரசர்கள், மௌலவிகள், அரசிகள் உள்ளிட்டோர் குறித்த இருட்டடிப்புச் செய்யப்பட்ட சரித்திரச் சான்றுகளை ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது இந்நூல். கி.பி. 1831ஆம் ஆண்டு முதல் கி.பி. 1859ஆம் அண்டு வரை நடந்த பல்வேறு புரட்சிகளில் மௌலவிகளும், முஸ்லிம்களும், ஆலிம்களும் 7 லட்சம் பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர் என்கிற புள்ளி விவரம் இஸ்லாமியர்களில் வீரத்தைப் பறைசாற்றுகிறது. சிறைச்சாலையில் இருந்து பண்டித நேரு எழுதிய இந்தியாவின் தரிசனம் என்ற நூலில் 1857ஆம் ஆண்டு நிகழ்ந்த புரட்சிக்குப் பின் முஸ்லிம்கள்தான் மிகுந்த இன்னலுக்குள்ளானார்கள் என்று குறிப்பிட்டுள்ளதை நூல் எடுத்துக்காட்டுகிறது. முகலாய அரசர்கள், விக்டோரியா மகாராணி உள்ளிட்டோர் வெளியிட்ட பிரகடனங்கள், ச.து.க. யோகியால் பாடப்பெற்ற விடுதலைச் சிந்து ஆகியவை பின்னிணைப்பாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சிறந்த ஆய்வு நூல். நன்றி: தினமணி, 12/10/2015.