முழு மதுவிலக்கு அதுவே நமது இலக்கு
முழு மதுவிலக்கு அதுவே நமது இலக்கு, இரா. ரவிக்குமார், கொங்குமண்டல ஆய்வு மையம், உடுமலைப்பேட்டை, பக். 368, விலை 250ரூ.
பூரண மதுவிலக்கு என்ற கோரிக்கை தமிழகத்தின் பல்வேறு திசைகளில் இருந்தும் ஒலித்து வருகிறது. அதற்கு வலு சேர்க்கும் விதமான தக்க சமயத்தில் இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது. மதுப்பழக்கத்தினால் தனிமனிக்கும், அவனைச் சார்ந்துள்ளோருக்கும், சமுதாயத்துக்கும் ஏற்படும் பேராபத்துகள் பற்றி ஆசிரியர் இந்நூல் தெளிவாகக் கூறியுள்ளார். பழைய இலக்கியங்களில் சோமபானம், சுராபானம் என்று கூறப்பட்டிருந்தாலும், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில்தான் மதுவின் தாக்குதல் தமிழகத்தில் அதிகமாகியது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் மக்களின் உடல் நலம் குறித்த ஆய்வறிக்கையை போரே கமிட்டி சமர்ப்பித்தது. வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விரக்தி, கடன்சுமை, ஏமாற்றம், குடும்பச் சிக்கல் போன்றவை மதுப்பழக்கத்துக்குக் காரணமாக இருப்பதாக அந்த கமிட்டி கூறியது. இதே காரணங்கள் இன்றைய காலகட்டத்துக்கும் பொருத்தமாக உள்ளது. ஒரு கெட்ட பழக்கம் இரண்டு குட்டிபோடும் என்ற கொங்கு நாட்டின் பழமொழிக்கேற்ப, மதுப்பழக்கம் வேறு தீய பழக்கங்களுக்கும் வழி வகுக்கும் என்கிறார் நூலாசிரியர். மது ஒழிப்பில் காந்தி, பெரியார், ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், அண்ணா, திரு.வி.க., வ.உ.சி. ஜீவா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் பங்கு விளக்கப்பட்டிருக்கிறது. மது ஒழிப்பு குறித்து அவர்கள் கூறிய கருத்துகள் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களில், திருக்குறள், நாட்டுப்புறப்பாடல்கள், கம்பராமாயணம் உள்ளிட்ட இலக்கிய நூல்களில் காணப்படும் மது ஒழிப்பு குறித்த கருத்துகள் எல்லாம் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. மிகவும் முக்கியமாக மது ஒழிப்புக்கு ஆதரவு அளிக்கும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மது நுழைந்த வரலாறு, அது கடந்து வந்த பாதை, இன்றைய நிலை என அனைத்தும் இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளன. நன்றி: தினமணி, 2/11/2015.