சுவரொட்டி
சுவரொட்டி, கலாப்ரியா, கயல்கவின் புக்ஸ், 16/25, 2வது கடல்போக்கச் சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை 41.
வெளிப்படையான அனுபவங்களை எழுதுவது தங்களது பிம்பங்களை உடைத்துவிடும் என்பது அனேக தமிழ் எழுத்தாளர்களின் பயமாக இருக்கிறது. போலி முகமூடிகளின்றி நேர்பட பேசும் கலாப்ரியாவின் உரையாடல்களின் தொடர்ச்சிதான் அவரது கட்டுரைகள். கலாப்ரியாவின் நான்காவது கட்டுரைத் தொகுப்பான சுவரொட்டி வாழ்வின் பெரும்பகுதியை சினிமாவில் தொலைத்த தமிழர்களின் வாழ்வை சுவாரஸ்யமாக விவரிக்கிறது. தீவிர சினிமா ரசிகர்களுக்கு தியேட்டரில் வேலை பார்ப்பவர்களுடனான உறவு பற்றி சொல்லும்போது, Murder She Said என்ற படம் திரையிடப்பட்ட அரங்கின் மேனேஜரிடம் இதுதான் என் கடமை படத்தின் கதை என்று கலாப்ரியா கூற உடனே அவர் வாசலில் இருக்கும் போர்டில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த என் கடமை திரைப்படத்தின் கதை என்று எழுதச் சொல்கிறார். காப்பி படத்தை முன்னிறுத்தி ஓரிஜினலுக்கு விளம்பரம். இந்த தொகுப்பிலுள்ள கட்டுரைகளை வாசிக்கும்போது அறுபதுகளில் தமிழர்கள் சினிமா என்ற போதையில் சிக்கியிருந்தார்களோ என்று தோன்றலாம். கலாப்ரியாவின் முதல் கவிதைக்கும் முதல் கட்டுரைக்கும் இடையில் 39 ஆண்டுகள் இடைவெளி. இந்த நீண்ட இடைவெளியில் அவர் மன அடுக்குகளில் சேமித்து வைத்திருக்கிற அனுபவங்களை கொஞ்சம் கொங்சமாக ரிலீஸ் செய்கிறார். 60களின் தமிழ் சினிமா சூழலை துல்லியமாக படம்பிடித்துக் கூறும் இந்த சுவரொட்டி சினிமாவை விரும்பும் சகலருக்கும் பிடிக்கும். நன்றி: அந்திமழை, 1/12/2014