செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்
செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், வயல்வெளி பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல், கங்கை கொண்ட சோழபுரம் வழி, அரியலூர் மாவட்டம், விலை ரூ150.
சங்க இலக்கியம் காட்டும் கரிகாற்சோழன் முதலாகப் பட்டினப்பாலை என்னும் கட்டுரை ஈறாக 20 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இலக்கிய நூல்களின் கருத்துக்களை வாழ்வியல் செய்திகளோடு எளிய மொழி நடையில் சுவைபட சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் முனைவர் மு. இளங்கோவன். நன்றி: தினத்தந்தி, 16/10/2013
—-
ஜுபிடர் பிக்சர்ஸ் – ஜுபிடர், எஸ்.கே. ஹபிபுல்லா, விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை 26, பக். 192, விலை 150ரூ.
அந்நாளில் நட்சத்திரங்களுக்கு நிகராகப் புகழ் பெற்றிருந்த படத் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ஜுபிடர் பிச்சர்ஸ், 1940 முதல் சுமார் 15 ஆண்டுகள் எடுத்த படங்கள் பற்றியும், அதனுடன் தொடர்புடைய நடிகர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள், இசை அமைப்பாளர்கள் போன்றவர்களைப் பற்றியும் வெளிப்படையாகவும், சுவையாகவும் பதிவு செய்கிறது இந்நூல். ஜுபிடர் பிக்சர்ஸின் உரிமையாளர்களான சோமுவும், எஸ்.கே.மொய்தீனும் திருப்பூரில் வியாபாரிகளாக இருந்தபோது அங்கு நாடகம் நடத்த வந்த டி.கே.எஸ். சகோதரர்களின் நட்பால், அவர்கள் நடத்திய மேனகா நாடகத்தையே படமாகத் தயாரித்து திரையுலகில் நுழைந்தது முதல் (1935) தொடர்ந்து இளங்கோவன் வசனத்தால் புகழ்பெற்ற கண்ணகி (1942), எம்.ஜி.ஆர். முதன்முதலில் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி (1947), மு.கருணாநிதி வசன உதவியாளராக அறிமுகமான அபிமன்யூ (1948), அண்ணாவின் பகுத்தறிவு பிரச்சாரமான வேலைக்காரி(1049), கண்ணதாசன் பாடலாசிரியராக அறிமுகமான கன்னியின் காதலி(1949), ஸ்ரீதர் வசனகர்த்தாவாக அறிமுகமான ரத்தபாசம் (1954) போன்ற தமிழ்த் திரையுலக வரலாற்றின் பல முக்கிய படங்களைத் தயாரித்தபோது ஏற்பட்ட அனுபவங்களையும் நிகழ்ந்த சம்பவங்களையும் கூடிய வரையில் கால வரிசைப்படி பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். குபேர குசேலா படத்தில் டி.ஆர். ராஜகுமாரியின் சுயம்வரக்காட்சியில் ஓர் இளம் வயது மன்னாக நடித்தார், பின்னாளில் மெல்லிசை மன்னர் என்று புகழ்பெற்ற எம்.எஸ். விஸ்வநாதன் என்பன போன்ற பல தகவல்கள் வியப்பூட்டக் கூடியவை. நூலைப்படித்தவுடன், சுவையான கறுப்பு, வெள்ளைப் படத்தைப் பார்த்து முடித்த நிறைவு ஏற்பட்டது. நன்றி: தினமணி, 6/10/13.