செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்
செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், முனைவர் மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இளம் அறிஞர் விருது பெற்றவர் இந்நூலாசிரியர். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திருக்குறள் தொடர்பான, 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இணையம் வழியாக தமிழ் பரப்பும் முனைப்பு மிக்கவர். ஆய்வு நெறிகளில் ஆர்வமும், ஊக்மம் கொண்டவர் என்பதை இக்கட்டுரைகள் உறுதி செய்கின்றன. பல்வேறு நாடுகளில் நடைபெற்ற ஆய்வுக் கருத்தரங்குகளில், கட்டுரைகள் படைத்தவராதலின் நூலின் தரம் உயர்ந்துள்ளது. தமிழர்களின் பண்டைக்காலத்து ஆவணமாகப் பட்டினப்பாலை விளங்குவதை விரித்தெழுதியுள்ளார். ஈழத்து அறிஞர்கள் ஆற்றிய திருக்குறள் பணிகளை விளக்கிப் போற்றியுள்ளார். மலைபடுகடாம் நூலின் வரலாறு திரித்துரைக்கப்படும் போக்கினைப் பலப்படுத்தியுள்ளார். சிலப்பதிகாரம் தமிழர்களின் இசைக்கருவூலம் என்பதைப் புலப்படுத்திய பாங்கு நன்று. சிலப்பதிகார உரைகளை ஆராய்ந்தும் பஞ்சமரபு வெண்பாக்கள் பற்றி குறிப்பிட்டும் ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க பெருமுக்கல் என்னும் மலை பற்றிய அரிய தகவல்களை வழங்கியுள்ளார். திண்டிவனம் மரக்கணம் இடையே அமைந்த இவ்வூரின் பழைய பெயர் கங்கை கொண்ட நல்லூர். மலேசியக் கவிஞர் சி. வேலுசாமியின் திருக்குறள் உரைத்திறனை வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு கட்டுரைக்கும் பயன்பட்ட நூல்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. ஆக ஆய்வு நூல் என்பது, பலரது கருத்துகளில் இருந்து எடுத்து தொகுக்கப்படுவதாக அமைகிறது. நூலின் மொழி நடை ஓங்கி நிற்கிறது. பிழைகள் இல்லாத செம்பதிப்பாக நூல் வெளிவந்திருப்பது பாராட்டிற்குரியது, தமிழ் ஆர்வலர்களுக்கு விருந்தாகும் நூல் இது. -கவிக்கோ ஞானச்செல்வன்.
—-
மௌனியின் கதைகள், கி.அ. சச்சிதானந்தம், சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 192, விலை 110ரூ.
தமிழ்ச் சிறுகதையை உலகத் தரத்திற்கு கொண்டு சென்றவர் மவுனி. இலக்கிய உலகம் ஆசானாகப் போற்றிக் கொண்டாடும் மவுனியின் அழியாச்சுடர், தவறு, மனக்கோட்டை உள்ளிட்ட, 13 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, தொகுத்துள்ளார் கி.அ. சச்சிதானந்தம். பல நூல்களை எழுதியுள்ள, சிறந்த இலக்கிய படைப்பாளியான இவர், மவுனியுடன் நெருங்கிப் பழகியவர். 1967ல் தீபம் இதழில் வெளியான மவுனியன் நேர் காணலும், நூலாசிரியரின் தொகுப்புரையும் அதில் இடம்பெற்றுள்ள மவுனியின் பல பக்க கையெழுத்து, நகலும் நூலுக்குப் பெருமை சேர்க்கின்றன. -கவுதம நீலாம்பரன். நன்றி: தினமலர், 5/1/14.