சேதிராய நாடார்கள்
சேதிராய நாடார்கள், வெ. செந்திவேலு, அ. இன்பக்கூத்தன், காவ்யா, பக். 229, விலை 220ரூ.
தமிழகத்தின் நாடார் சமூகத்தினரை சாணார் என்று குறிப்பிடுவர். அது தவறு என்றும் சான்றான் எனும் தமிழ்ச் சொல்லே பேச்சுவழக்கில் சாணான் என்று வழங்குகிறது என்றும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. கி.பி. 1750இல் பொறிக்கப்பட்ட குலசேகரப்பட்டினம் விநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டில் நாடார்களின் ஒரு பிரிவான சேதிராய நடார்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. களக்காடு அருகே உள்ள சேதுராயபுரம் என்ற கிராமத்தில் தற்போது சேதுராய நாடார்கள் வாழ்ந்து வருகிறார்கள். குலசேகரப்பட்டினம் கல்வெட்டில் சேதிராய நாடார்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் தங்களைச் சேதுராயர்கள் என்று அழைத்துக்கொள்ள என்ன காரணம் என்பதை இந்நூல் ஆராய்கிறது. சேதுராயர்கள் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு மலையமான் நாடு என்ற சேதி நாட்டை ஆண்ட மன்னர்களின் சந்ததியினர் என்றும், அவர்கள் சேர மன்னர் பரம்பரையின் ஒரு கிளையினர் என்றும், சேரநாட்டிலிருந்து அவர்கள் தென்பாண்டி நாட்டில் குடிபுகுந்தனர் என்றும் பல ஆதாரங்களின் அடிப்படையில் இந்நூல் விளக்குகிறது. எனினும் வரலாற்றில் பலவற்றைத் திரித்துக் கூறிவிட்டார்கள். இதற்கு உதாரணமாக, கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் கி.பி. 1950இல் வேலுத்தம்பியின் ‘ஜீவ சரித்திரம்’ என்னும் கதைப்பாடல் நூல் வெளியிடப்பட்டது. அதில் நாகமணி மார்த்தாண்டன் நாடார் தனது படைவீரர்களுடன் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடத் தயாராக இருந்தார் என்று கூறப்பட்டிருந்தது. இக்கதைப் பாடலைப் படிப்பவர்கள் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த நாகமணி மார்த்தாண்டன் நாடார் மற்றும் அவரது படைகளைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்வார்கள் எனக் கருதி அந்த நூலின் அடுத்த பதிப்பில் நாகமணி மார்த்தாண்டன் நாடா மற்றும் அவரது நாடார் படைப்பகுதியை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு ‘நாயர் படை’யைப் பகுதியைப் புகுத்திவிட்டார்கள்’ என்ற நூல் கூறும் தகவலைச் சொல்லாம். நாடார்கள் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று பல்வேறு இலக்கிய ஆதாரங்கள், கல்வெட்டு ஆதாரங்களின் அடிப்படையில் இந்நூல் கூறுகிறது. நன்றி: தினமணி, 28/12/2015.