சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 10

சைவ சமயக் கலைக் களஞ்சியம், தொகுதி 10, தோரணவாயில், தலைமைப் பதிப்பாசிரியர்-முனைவர் ஆர்.செல்வக்கணபதி, தெய்வச் சேக்கிழார் மனித வள மேம்பாடு அறக்கட்டளை, 10 தொகுதிகள், 7200 வண்ணப்பக்கங்கள், விலை – 10 தொகுதிகளும் ரூ. 15,000.

சைவ சமயக் கலைக் களஞ்சியம் 10 தொகுதிகளையும் 7200 பல வண்ணப் பக்கங்களையும் 3300 படங்களையும், 1700 பெட்டிச் செய்திகளையும், 22 ஆயிரம் தலைமைப் பதிவுகளையும், 51 ஆயிரம் துணைப் பதிவுகளையும் கொண்ட உலகளாவிய சைவ சமயத்தின் 5 ஆயிரம் ஆண்டுக்கால வரலாற்று ஆவணப் பெட்டகம். கலைக் களஞ்சிய்ததின் முதல், 9 தொகுதிகளிலும் இடம் பெற்றுள்ள அனைத்துச் செய்திகளையும், தொகுதி எண் மற்றும் பக்க எண்களுடன், எளிதில் கண்டறிய உதவும் கைவிளக்கு தோரண வாயில். தொகுதி எண் ரோமன் வடிவத்திலும், பக்க எண் வழக்கில் உள்ள எண்களின் வடிவத்திலும் தரப்பெற்றுள்ள, அகர வரிசையில் அமைந்த, 51 ஆயிரம் பதிவுகளும், இத்தொகுப்பில் 434 பக்கங்களில் துல்லியமாகப் பதிவு செய்யப் பெற்றுள்ளன. உதாரணமாக குமரகுருபரர் என்ற பதிவு இத்தொகுப்பு1-187, 271, iv-55, 6vi36, vii-269, viii-119,ix-447 என 6 தொகுதிகளில் வேறு வேறு காரணங்களுக்காக, இடம் பெறச் செய்யப் பெற்றமையை, எளிதில் கண்டறியத் துணை செய்கிறது. இத்தொகுதியை திருவாவடுதுறை ஆதீன, 24வது குருமகாசந்நிதானத்தின் அருளாசியுரை அணி செய்கிறது. நீதியரசர் டாக்டர் ஏ.ஆர். லட்சுமணன் வாழ்த்துரை சைவ – சமயக் கலைக் களஞ்சிய முயற்சியைத் துல்லியமாக, மதிப்பிட்டு உரைக்கிறது. பதிப்பாசிரியரின் துணைவியார் சந்திரா செல்வக்கணபதி கலைக்களஞ்சிய உருவாக்கத்தின் பின்புலமாக நின்றதையும், மற்றும் உருவாக்கத்தில் உதவிய நன்னெஞ்சினரை எல்லாம், நினைவு கூர்ந்து பாராட்டி நிறைகிறது. கலைக்களஞ்சியத்தை வாழ்த்திய அருளாளர்களும், ஆதீனங்களும் வழங்கியுள்ள ஆசியுரைகள், தோரண வாயிலுக்குப் பெருமை சேர்க்கின்றன. இன்று தமிழ் நாட்டில் வாழ்ந்து வரும், ஏறத்தாழ அறுபது சைவத்தமிழ் அறிஞர்கள் வழங்கியுள்ள வாழ்த்துரைகள், அகர வரிசையில் பதிவாகியுள்ளது சிறப்பாகும். சைவ சமயக் கலைக் களஞ்சியத்திற்கு இணையான, பல வண்ணத்தில் அமைந்த, மேலைநாட்டு நூல் கட்டமைப்பைக் கொண்ட பிரமாண்டமான நூல் தொகுதிகள் ஏதும், இதுவரையில் தமிழில் வெளிவரவில்லை என்று, அறிஞர் உலகம் போற்றும் பெருமை மிக்க இம்முயற்சியைத் தமிழ்ச் சைவ உலகம் ஏற்றுப் போற்றும் என்பது நிச்சயம். -திருமதி. அல்லியங்கோரை சபாநாயகம். நன்றி; தினமலர், 1/12/13. சைவ சமயக் கலைக் களஞ்சியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *