சொலவடைகளும் சொன்னவர்களும்

சொலவடைகளும் சொன்னவர்களும், ச. மாடசாமி, சூரியன் பதிப்பகம், பக். 272, விலை 200ரூ.

ஏழ்மையின் செல்வாக்கு! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024759.html பழமொழி என்ற சொல், சொலவடை என, புதுக்கப்பட்டது. நம் பண்பாட்டின் நிலைக்களனாய் உள்ள கிராமங்களில், உழைக்கும் மக்களிடமிருந்து உருவாகும், உன்னத அனுபவங்களில் இருந்து, பட்டை தீட்டப்பட்ட வைர வரிகளே, இந்த சொலவடைகள். வாழ்வியல் அனுபவம், கவித்துவம், நக்கல் மூன்றும் கலந்து இதில் மிளிர்கிறது. நாட்டுப்புற இலக்கியமாய் தெம்மாங்கு, பள்ளு, கும்மி, லாவணி ஏடுகளில் பதிவாகி உள்ளன. வீட்டுப்புற இலக்கியமாய் வழக்கிலும், வாய்ச்சொற்களிலும் மட்டுமே உலாவரும், ‘எழுதப்படாத இலக்கியம்’ சொலவடைகளை, ஒன்பது தலைப்புகளில் ஆசிரியர் மிக அற்புதமாகத் தொகுத்து ஆவணம் ஆக்கியுள்ளது, வரலாற்றுப் பதிவு. பெர்சிவல், ஜான்சன் போன்ற கிறிஸ்தவ அறிஞர்கள் வெளியிட்ட ஆங்கில நூல், இந்தப் பணிக்கு வழிகாட்டியதாகக் கூறியுள்ளார். சொலவடைப் பட்டியலாக பல தலைப்புகளில் பிரித்துப் போட்டு தராமல், அது உருவான சூழலையும் அழகாக விளக்குகிறார். ‘ரோஷம் உள்ளவனுக்கு கடன் கொடு! ரோஷம் கெட்டவனுக்கு பெண்ணைக் கொடு’ இது நடைமுறை ஞானம். ஆன்மிக ஞனம் அல்ல. மனதிற்குள் நடக்கும் கொடுக்கல் பேச்சை, வெளிப்படையாகப் பேசச் சொலவடையால் மட்டுமே முடியும்(பக். 203). சொலவடையும், விளக்கமும் பாலும், தேனும் கலந்து இனிக்கின்றன. எது சொலவடை? தருணங்கள், கசப்பு, கரிப்பு, குறும்பு, சிரிப்பு, யதார்த்தம், விமர்சனம், விவேகம், மனோபாவம், மிச்சம் இந்த ஒன்பது தலைப்புகளில், சொலவடைகள் விரிவாகத் தரப்பட்டுள்ளன. ஆனால் முதல் பக்கம், தலைப்புகளின் பொருளடக்கமே இல்லை. நூலுக்குள் நுழைபவருக்கும், ஊருக்குள் நுழைபவருக்கும், முதலில் பெயர்கள் தானே படிக்கத் தேவை? ஏழ்மையின் சொல்வாக்கில் விளைந்த, ‘இலக்கியச் செல்வாக்கு’ இந்த சொலவடைகள்! உயர்வும், தாழ்வும் ஊராருக்கு வெளிப்படுத்தும் நாட்டுப்புற ஆளுமையை இந்நூல் நயமுடன் பேசுகிறது. -முனைவர் மா.கி. இரமணன். நன்றி: தினமலர், 13/3/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *