ஜான் கென்னடி கொலையானது எப்படி?
ஜான் கென்னடி கொலையானது எப்படி?, சிவதர்ஷினி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 70ரூ.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி, 1963ம் ஆண்டு டல்லாஸ் நகரில் காரில் ஊர்வலமாக சென்றபோது எவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டார்? அவரை சுட்டதாக கைது ஆன ஆஸ்வால்டு என்பவனை ஜேக் ரூபி என்பவன் சுட்டுக்கொன்ற மர்மம் என்ன? என்பது பற்றியும், மற்றும் இது தொடர்பான அனைத்து தகவல்களும் துப்பறியும் நாவல்போல சுவைபட தொகுத்துத் தரப்பட்டுள்ளன. கென்னடி கொல்லப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவரை உண்மையில் சுட்டுக்கொன்றது யார்? கொலைக்கான காரணம் என்ன? இதில் சர்வதேச சதி இருக்கிறதா? என்று பல முடிச்சுக்கள் அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றன. இது பற்றி முழு சரித்திரத்தையும் திகில் சித்திரமாகத் தந்து இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 8/1/2014.
—-
சிந்தாமணி நிகண்டு (மூலமும் உரையும் அகராதியும்), வல்லவை ச. வயித்தியலிங்கர், வ. ஜெயதேவன், ஆர். பன்னிருகை வடிவேலன், நோக்கு, 259, நேரு நகர், 2வது தெரு, முதன்மைச்சாலை, கொட்டிவாக்கம், சென்னை 96, பக். 156, விலை 100ரூ.
தமிழில் நிகண்டு நூல்கள் பல. நிகண்டு என்பது ஒரு சொல்லுக்குப் பல பொருட்களைத் தொகுப்பாகத் திரட்டித்தரும் இலக்கண நூல் வகை. சிந்தாமணி நிகண்டு, தமிழில் எதுகையை அடிப்படையாகக் கொண்டு, ககர எதுகை முதல் னகர எதுகை வரையிலான சொற்களை, விருத்தப் பா வடிவில் தருகிறது. ஓர் அடிக்கு இரு செற்கள், ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பொருள் என்ற கட்டமைப்பில் அமைந்துள்ள இந்நூலை இயற்றிய ஈழத்தைச் சார்ந்த வல்லவை ச. வயித்தியலிங்கர், சிறந்த தமிழறிஞர். சமய நூல்கள் பல எழுதியவர். வடமொழி கற்றவர். இலக்கிய, இலக்கண உரையாசிரியர் என்ற பன்முகப் பார்வைக்குரியவர். காப்பு, பாயிரம், சிறப்புப்பாயிரம் நீங்கலாக, 386 விருத்தங்களைக் கொண்டுள்ளது. இந்நூலைப் பதிப்பாசிரியர்கள் பிழையின்றி அழகுற அச்சிட்டிருப்பது பாராட்டுக்குரியது. -ராம. குருநாதன். நன்றி: தினமலர், 16/2/2014.