ஜே.பி. சந்திரபாபு வாழ்க்கை வரலாறு
ஜே.பி. சந்திரபாபு வாழ்க்கை வரலாறு, விக்டோரியா பதிப்பகம், 5, நவுரோஜி அப்பார்ட்மெண்ட், 60, பச்சையப்பன் கல்லூரி விடுதி சாலை, சென்னை 31, விலை 300ரூ.
நகைச்சுவை நடிகர்களில் சிறப்பிடம் பெற்றவர் சந்திரபாபு. மேல் நாட்டு பாணியில் நடனம் ஆடுவார். சொந்தக்குரலில் பாடுவார். சிவாஜிகணேசனுக்கு அடுத்த சிறந்த நடிகர் நான்தான் என்று தைரியமாகக் கூறியவர். குறைந்த படங்களில்தான் நடித்திருந்தாலும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். 1958ல் ஷீலா என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை மணந்த சந்திரபாபு, அவள் மனதில் ஏற்கனவே வேறு ஒருவர் இடம் பிடித்திருக்கிறார் என்பதை அறிந்து மனப்பூர்வமாக ஷீலாவுக்கு விடுதலை அளித்தார். எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தி விடை கொடுத்தார். ஷீலா லண்டனுக்குச் சென்று தன் காதலனை மணந்து கொண்டாள். திருமணத்தோல்வியினால் மணம் உடைந்துபோன சந்திரபாபு 47வது வயதில் மரணம் அடைந்தார். சந்திரபாபுவை நன்கு அறிந்தவரான சொர்ணராஜன் தி.விக்டோரியா (எஸ்.டி.வி) மேற்கொண்டு பல ஆய்வுகளும், ஆராச்சிகளும் நடத்தி நகைச்சுவை சக்கரவர்த்தி ஜே.பி.சந்திரபாபு என்ற இந்த நூலை அற்புதமாக எழுதியுள்ளார். அபூர்வமான படங்கள் நிறைந்துள்ளன. சினிமா கதைபோல் அமைந்துவிட்ட சந்திரபாபுவின் சோக வரலாற்றை அறிந்து கொள்ள அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 8/1/2014.
—-
கட்டுரைக் களஞ்சியம், ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், சென்னை 4, பக். 216, விலை 100ரூ.
பல்வேறு காலகட்டங்களில் பல விஷயங்கள் குறித்து ம.பொ.சி. எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சிலம்புச் செல்வர் எத்தகைய ஆளுமை உடையவர், அவருடைய பணிகள் எத்தகையவை என்பதை நுழைவாயிலில் சிறப்பாக பதிவு செய்துவிடுகிறார் பெ.சு.மணி. தமிழர் குறித்த கவலைகள் இந்தக் கட்டுரைகளில் பரவலாக இருக்கின்றன. வ.உ.சி. மீதும் காந்தியடிகள் மீதும் ம.பொ.சி. கொண்டிருந்த ஈடுபாடு இந்த கட்டுரைகளில் பளிச்சிடுகிறது. பல கருத்துகள் இன்றைக்கும் பொருந்துவன. உதாரணத்துக்கு வாக்காளரும் தேர்தலும் கட்டுரை. 1950இல் வெளியான இக்கட்டுரையின் கடைசி பத்தி இது. வகுப்புப் பற்றை விட மிகக் கேவலமானது வகுப்பு வெறி. அந்த வகுப்பு வெறியர்களைத் தேர்தல் முகாமில் நுழைய விடக்கூடாது. சாதி அமைப்புகளின் பேராலோ, சாதிகளின் பேராலோ நிற்கு அபேட்சகர்களை வாக்காளர்கள் தயவு தாட்சண்யம் இன்றி நிராகரிக்க வேண்டும். அத்தகையவர்களைத் தேர்ந்தெடுப்பது ஜனநாயக வளர்ச்சிக்கு தடை செய்வதாகும்.(முரசு, மே1950). வழவழா என்று இல்லாமல் பல கருத்துக்களைத் தெளிவாகச் சொல்கிறார். காந்தியின் காங்கிரஸ் ஸ்தாபனம் ஏழைகளுக்கானது. இன்று அப்படியாக இல்லை என்று ஆணித்தரமாகச் சொல்கிறார். நன்றி: தினமணி, 2/2/2014.