தூது வந்த வீரர்
தூது வந்த வீரர், ஏம்பல் தளும் முல் முகம்மது, நியூலைட் புக் சென்டர், 1504ஏ, எம்.ஐ.ஜி., 3ம் முதன்மைச் சாலை, மாத்தூர், எம்.எம்.டி.ஏ., சென்னை 68, பக். 224, விலை 200ரூ.
தாமஸ் கார்லைல், 1840ல் லண்டனில் ஆற்றிய சொற்பொழிவின் தமிழாக்கம் இந்நூல். இதில், இளவரசர் சார்லஸ் ஆற்றிய இஸ்லாமும் மேற்கு நாடுகளும் என்ற சொற்பொழிவின் தமிழாக்கமும் இணைந்துள்ளது. அண்ணல் நபிகள் நாயகம் பற்றி, அப்போது பரப்பப்பட்டு வந்த வதந்திகளையும், இஸ்லாம் மார்க்கம் பற்றிய உண்மை நிலைகளையும், ஒரு கிறிஸ்தவராக இருந்து கார்லைல் ஆற்றிய இச்சொற்பொழிவு உலக இலக்கிய வரிசையில் இடம் பெற்ற ஒன்று. அரேபியத் தீபகற்பத்தின், வரலாற்றுப் பின்னணியில் நபிகளின் வரலாற்றின் முக்கிய அம்சங்களைக் கூறி, அவர் அளித்த குர்ஆனின் பெருமைகளை உணர்த்தும் கார்லைல் சொற்பொழிவுக்குப் பின்தான், உலக நாடுகளிடையே இஸ்லாம் பிரசித்தம் பெற்றது என்பது பொதுக்கருத்து. க அபாவுக்குள் மட்டும், 360 விக்ரகங்களை வைத்து அனுதினமும் வணங்கி பூஜை செய்து வந்தனர் (பக். 84), நபிகள் தம் 18வது வயதில் முதல் களம், கலந்து கொண்ட முதல் போர் பிஜார் (பக். 88). இறைவன் மிகப் பெரியவன். என்னைக் கொன்றாலும் நான் அவனிடத்தில் நன்னம்பிக்கை வைப்பேன்(பக். 103). இப்படி ஏராளமான தகவல்கள் இதில் உள்ளன. இஸ்லாம் பற்றி அறிய விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. -பின்னலூரான். நன்றி: தினமலர், 16/2/2014.
—-
முனைவர் இரா. மோகன் அவர்களின் புலமை நலம், முனைவர் பா. வளன் அரசு, கதிரவன் பதிப்பகம், 3, நெல்லை நயினார் தெரு, பாளையங்கோட்டை 627002, விலை 120ரூ.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் இரா. மோகன் ஆய்வு, பதிப்பு, தொகுப்பு, உரைவிளக்கம், அணிந்துரை, கடித இலக்கியம், தன் முன்னேற்றம் என்று பன்முகத் தமிழறிஞராக விளங்குகிறார். அவருடைய எழுத்தோவியங்கள் குறித்த ஆய்வு உரைகளின் தொகுப்புதான் இந்நூல். தமிழ் விருந்து பருக விரும்புவோர் இந்நூலை வாசிக்கலாம். நன்றி: தினத்தந்தி, 8/1/2014.