ஜி. சுப்பிரமணிய ஜயர் சரித்திரம்
ஜி. சுப்பிரமணிய ஜயர் சரித்திரம், குருமலை சுந்தரம் பிள்ளை, பதிப்பாசிரியர் செ. ஜெயவீரதேவன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 124, விலை 90ரூ.
புதிய விழிப்பின் ஆதின கர்த்தர்களில் ஒருவர் என்று பாரதியால் குறிப்பிடப்பட்ட பெருமைக்குரியவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். ஒரே நேரத்தில் அரசியல், சமூக சீர்திருத்தம், இதழியல் என பல நிலைகளில் செயல்பட்ட முன்னோடி. சமூக சீர்திருத்தத்தை வெறும் வார்த்தைகளில் மட்டுமின்றி, நடைமுறை வாழவிலும் கடைப்பிடித்தவர். மூத்த மகள் தம் பன்னிரண்டாவது வயதில் கணவனையிழக்க அதே ஆண்டின் இறுதியில் அப்பெண்ணுக்கு அவர் மறுமணம் செய்து வைத்தார். இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கத்தில் துணை நின்றவர். சுதேசி இயக்கத்தை சென்னை மாகாணத்தில் பெரும் உயிர்ப்போடு வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் என்று பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரர். ஜயரின் சிறுபிராய வாழவில் தொடங்கி 1907 வரையிலான அவரது அரசியல், சமூகப் பணிகளை எடுத்துரைப்பதுடன் அன்றைய காங்கிரஸ் அமைப்பில் வழக்குரைஞர்களின் ஆதிக்கம் குறித்த விமர்சனமும் நூலில் இடம் பெற்றுள்ளது. சமகாலத்தவரான குருமலை சுந்தரம் பிள்ளை, ஜி. சுப்பிரமணிய ஐயரின் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் இந்நுலை எழுதியுள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த இந்நூலைத் தேடிப்பிடித்து பதிப்பித்துள்ளது பாராட்டத்தக்க முயற்சி. நன்றி: தினமணி, 14/3/2016.