ஜெயகாந்தன்-ஒரு மனிதன் ஒரு உலகம்
ஜெயகாந்தன்-ஒரு மனிதன் ஒரு உலகம், தொகுப்பாசிரியர் மணா, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 256, விலை 170ரூ.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் நினைவைப் போற்றும்விதமாக உருவாகியுள்ள நூல். எனது வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமாகவே வைத்துக் கொள்ள நான் முயலுகிறேன்’ என்று சொன்னார் ஜெயகாந்தன். அவர் தன்னைப் பற்றி எழுதிய கட்டுரைகள், அவர் அளித்த நேர்காணல்கள், ஜெயகாந்தனுடன் பழகியவர்கள் எழுதிய கட்டுரைகள், ஜெயகாந்தன் மணிவிழா மலரில் ஜெயகாந்தனின் துணைவியார் எழுதிய கட்டுரை, ஜெயகாந்தன் எழுதிய ‘ஒரு பிடி சோறு’ சிறுகதை, பிரபல ஓவியர்கள் வரைந்த ஜெயகாந்தனின் உருவ ஓவியங்கள் என ஜெயகாந்தனின் வாழ்க்கையை அவரின் பன்முகத்தன்மையை விளக்கும் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. நவீன தமிழ் இலக்கியத்தில் ஜெயகாந்தன் பதித்த அழிக்க முடியாத முத்திரைகளை இந்நூலில் உள்ள கட்டுரைகள் எடுத்துக்காட்டுகின்றன. ஜெயகாந்தன் என்ற இலக்கிய ஆளுமை எவ்வாறு ஒவ்வொருவரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை இந்நூலில் உள்ள கட்டுரைகளின் மூலம் அறிய முடிகிறது. தினமணி ‘தமிழ் மணி’யில் இந்த வாரம் பகுதியில் கலாரசிகன் எழுதிய கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. ஜெயகாந்தன் எழுதிய சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைநூல்கள், அவர் இயக்கிய திரைப்படங்கள், பெற்ற விருதுகள் என ஜெயகாந்தனைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் இடம் பெற்றுள்ள அற்புதமான நூல். நன்றி: தினமணி, 5/10/2015.