ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும், எ.வேலாயுதன், முருகம்மை இல்லம், புதுக்கோட்டை, பக். 72, விலை 25ரூ.
உலக இருளைப் போக்கி ஒளி வழங்கி, உயிர்களை உய்விக்கும் சூரியனை, சூரிய வழிபாடு என்ற பெயரில் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தொன்றுதொட்டு வணங்கி வருகின்றனர். பகைவர்களிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்ளவும், போரில் வெற்றிபெறவும் பாராயணம் செய்ய வேண்டிய வடமொழி மந்திரப்பாடல் ‘ஆதித்த ஹிருதயம்’தான் என்று கூறுவர். இதை வான்மீகி தன் காப்பியத்தில் வழங்கியுள்ளார். இராமன் ஆதித்திய ஹ்ருதயம் படித்தே இராவனணைப் போரில் வென்று, சீதையை மீட்டான் என்கிறது வான்மீகி ராமாயணம். ஆண்டுக்கு ஒரு முறை சூரியனைப் போற்றும் விழாவைப் பொங்கல் விழாவாக மக்கள் பன்னெடுங் காலமாகக் கொண்டாடி வருகின்றனர். சூரிய வழிபாட்டுத் தொன்மையை தமிழ் இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது. ‘சுடர்விட்டுளன் எங்கள் சோதி, மாதுக்கம் நீங்கலுறவீர் மனம்பற்றி வாழ்மின்’ என்பது திருஞானசம்பந்தர் திருவாக்கு. “இறைசுடர் சோதியை மிக்கு ஆராய்ந்து தெரிவதினும் அறிவுணர்வின் மனம் பற்றுதுலே மாதுக்கம் நீங்கலுறும் முறை என்று இறையுணர்வில் தமிழ் மக்களின் அறிவுணர்த் திறத்தையுணர்த்துகின்றது. இத்திறம் தமிழ் மக்களின் செஞ்சுடர் ஞாயிறு வழிபாட்டினுக்கும் பொருந்தும்” என்கிறார் நூலாசிரியர். ஞாயிற்றைப் போற்றும் பாயிரம், ஆதித்திய ஹிருதயச் செய்யுளும் தமிழாக்கமும், ஆதித்தனருள் வெண்பா, ஞாயிறும் இமனும், சங்கத் தமிழில் செங்கதிர்ச் செல்வன், இராமாயணம், சிலப்பதிகாரம், தொல்காப்பியம், நன்னூல், திருவாசகம், புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, பாரதியார் கவிதைகள், பொங்கல் வழிபாடு முதலியவற்றில் சூரியன் பெருமை எவ்வாறு பேசப்பட்டுள்ளன என்பதை விரிவாகவும் விளக்கமாகவும் ஆராய்ந்துள்ளது இச்சிறு நூல். நன்றி: தினமணி, 23/3/2015.