நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்

நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள், ரமணன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 152, விலை 115ரூ.

என்னுடைய வாரிசு ஜவஹர்லால் என்று காந்தி சொன்னார். இரண்டு பேருக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனாலும் காந்தியச் சிந்தனைக்கு மாற்றாக நேரு நடக்க மாட்டார் என்ற நம்பிக்கை மகாத்மாவுக்கு இருந்தது. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றியது மட்டுமல்ல, இந்தியாவை வடிவமைத்தவர் நேரு. இந்தியா தனது முதலாவது விடுதலை நாளைக் கொண்டாடியபோது, அதைச் செய்தியாக வெளியிட்ட பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்று. ‘அடுத்த ஆண்டு இப்படி ஒரு நிகழ்ச்சி இந்தியாவில் நடக்காது’ என்று தலையங்கம் தீட்டியது. இதனை மொழி, இனம், மதம் வேறுபாடு கொண்டதாக ஒரு நாடு தொடர்ந்து நீடிக்க முடியாது என்பது அவர்களது எண்ணம். அதைத் துடைத்து முதல் 18 ஆண்டுகள் இந்தியாவைக் காப்பாற்றிய பெரும் பெருமை நேருவையை சேரும். அந்த வரலாற்றைத் திரட்டிக் கொடுத்துள்ளார் ரமணன். இன்றைய காங்கிரஸ் கறைகளுடன் நேருவையும் பார்க்க நேர்ந்த அரசியல் சூழ்நிலையில் இந்தப் புத்தகத்தின் தேவை கூடுகிறது. “வாழும் காலத்தில் மிகையாகத் துதிக்கப்பட்ட நேருவின் சாதனைகள் அவரது மரணத்துக்குப் பின் காலப்போக்கில் குறைவாக மதிப்பீடு செய்யப்படுகிறது” என்று மிகச் சரியாகவே மதிப்பீடு செய்துள்ளார். மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்துக் கொடுத்து, அத்தனை மாநிலங்களையும் இந்தியப் பற்று மூலமாகப் பிரித்து வேற்றுமையில் ஒற்றுமை கண்டவர் நேரு. இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் எழுந்தபோது, இந்தி திணிக்கப்பட்டாது என்று வாக்குறுதி கொடுத்தவர் நேரு. இந்து நம்பிக்கைகளுக்கு விரோதம் இல்லாமல், அதனை சீர்திருத்தும் வகையில் சட்டங்கள் உருவாக்க அடித்தளம் இட்டவர் நேரு. பாசிஸம், இனவெறி, ஆக்கிரமிப்பு ஆகிய மூன்றையும் கடுமையாக எதிர்ப்பதை தன்னுடைய லட்சியமாக நேரு கொண்டிருந்தார். அதையே இந்திய அரசின் கொள்கையாகவும் வடிமைத்தார். இதன் தொடர்ச்சியாக ஜனநாயக சோஷலிசம் என்பதை தன்னுடைய அரசின் லட்சியமாக அறிவித்தார். அரசுத் துறையை அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அமைப்பாக மாற்றி, கம்யூனிஸ ஆட்சியையே வேறொரு கோணத்தில் அமைக்க நேரு முயற்சித்தார். அதற்கு அவரது அமைச்சரவை சகாக்களே முறையாக ஒத்துழைக்கவில்லை. ஆனால் ‘அதிகார அரசியல்’ நேருவின் ஆட்சியிலும் தலைதூக்கியது. இந்திராவின் கணவர் ஃபெரோஸ் கிளப்பிய புகார்கள், நேருவுக்கு கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்வதை முழுச்சிந்தனையாக மாற்றியது. ஆனாலும் தனது பரந்துபட்ட லட்சியத்தை நேரு இழக்கவில்லை என்பதற்கு உதாரணம் அவரது பஞ்சசீலக் கொள்கை இந்தியாவை உலக அரங்கில் கவனிக்க வைத்த கொள்கை அது. இது வரலாறுகள் அனைத்தையும் விமர்சனப் பார்வையுடன் இந்தப் புத்தகம் பேசுகிறது. ‘நேரு முழுவதும் நிறைவேறாத அழகிய கனவு’ என்று நேரு மறைந்தபோது வாஜ்பாய் எழுதிய வரிகளை ரமணன் நினைவுபடுத்தியிருக்கிறார். அந்த அழகிய கனவு ஏக்கம் கொடுப்பதாகவே இன்றுவரை இருக்கிறது. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 25/3/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *