தமிழ் சினிமா 100 சில குறிப்புகள்
தமிழ் சினிமா 100 சில குறிப்புகள், பி.எல்.ராஜேந்திரன், சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், சென்னை, பக். 376, விலை 285ரூ.
தமிழ் சினிமாவின் தவிர்க் முடியாத ஆளுமைகளான எல்லிஸ் ஆர். டங்கன், கே. சுப்பிரமணியம், எஸ்.எஸ். வாசன், டி.ஆர்.சுந்தரம், இளங்கோவன், மு. கருணாநிதி, தியாகராஜபாகவதர், எம்.ஜி.ஆர். முதலிய 99 பேரைப் பற்றிய அறிமுகம் சாதனைச் சுருக்கமும் சில அரிய புகைப்படங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. முதல் முதலில் டைட்டில் இசையை இசைத்தட்டாக வெளியிட்டு புதுமை செய்தவர் வீணை எஸ். பாலசந்தர், கே. சுப்பிரமணியத்தின் ஸ்டுடியோ, கோர்ட் உத்தரவுப்படி, ஏலத்துக்கு வந்தபோது அதை வாங்கி ஜெமினி ஸ்டுடியோவாக மாற்றினார் எஸ்.எஸ். வாசன், எம்.கே. தியாகராஜபாகவதர் தயாரித்து நடித்த ராஜமூக்தி படத்தின் மூலம்தான் பி.பானுமதி நடிகையாக தமிழ்ப் படவுலகுக்கு அறிமுகமானார்… இப்படி திரைப்படத்துறை தொடர்பான பல அரிய தகவல்கள் மட்டுமல்ல, திரைப்படம் சாராத ஆனால் திரைக் கலைஞர்கள் சம்பந்தப்பட்ட பல முக்கியத் தகவல்களும் இந்நூலில் இடம் பெற்றிருப்பது சிறப்பு. உதாரணமாக தயாரிப்பாளர் ஜி.என். வேலுமணி உப்பு சத்தியாகிரகத்தில் பங்கு பெற்று சிறைத்தண்டனை அனுபவித்தார், எழுத்தாளர் புதுமைப்பித்தன் வறுமையோடு போராடி இறந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய மனைவி கமலாவுக்கு லாட்டரியில் இரண்டு லட்சம் ரூபாய் பரிசு கிடைத்து… இப்படி பற்பல அரிய தகவல்கள். சில முக்கியக் கலைஞர்களைப் பற்றி இன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கலாம் (உதாரணம் கொத்தமங்கலம் சுப்பு, இளங்கோவன், எஸ்.வி.சகஸ்ரநாமம், பாபநாசம் சிவன்). இது தமிழ் சினிமாவுக்கு நூற்றாண்டும் அல்ல, இந்நூலின் தமிழ் சினிமாவின் நூறு கலைஞர்களைப் பற்றிய குறிப்புகளும் இல்லை. பின் ஏன் இப்படியொரு தலைப்பு? தமிழ் சினிமாவுடன் தொடர்புடையவர்களுக்கு மட்டுமல்ல, கலை ரசிகர்கள் அனைவருக்குமே இந்நூல் ஒரு சிறந்த கையேடு. நன்றி: தினமணி, 23/3/2015.