டாவின்சி கோட்
டாவின்சி கோட், டான் பிரவுன், தமிழில் பெரு. முருகன், இரா. செந்தில், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, விலை 599ரூ.
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023804.html கர்த்தரின் கடைசி வாரிசு! பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் உள்ள லூவர் அருங்காட்சியக காப்பாளரான, ஜாக் குவஸ் சோனியர், அருங்காட்சியத்தில் சுடப்படுகிறார். உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் வேளையிலும், பேத்தி சோபியா நெவ்யூ, ஹார்டுவேர்டு பல்கலை பேராசிரியர் ராபர்ட் லாங்டன் ஆகியோருக்காக, தனது உடலிலும், தரையிலும் சில ரகசிய குறிப்புகளை எழுதிவிட்டு இறந்துபோகிறார். அவர் விட்டுச் சென்ற ரகசிய குறிப்புகளில் இருந்து துவங்கும் கதை, பின் திகில் நிறைந்த மர்மக் கதையாக மாறிவிடுகிறது. ரகசிய குறிப்புகளில் இருந்து, புதிய பொருளை கண்டுபிடிப்பதும், அதிலிருந்து மீண்டும், அடுத்த பொருளுக்கான ரகசியங்கள் கிடைப்பதும் என, தவளை பாய்ச்சல் போல, கதை நகர்ந்து கொண்டே செல்கிறது. இறுதியில், லியனார்டோ டாவின்சி வரைந்த, இறுதி விருந்து ஓவியத்தில், அதற்கான ரகசியம் புதைந்திருப்பதை அறிகின்றனர். புனித கோப்பையை கண்டுபிடிப்பதற்கு, தன் வாழ்நாளை செலவிட்டு வரும் டீபிங் உதவியை நாடும்போதுதான், புனைதக் கோப்பை என்பது பொருள் அல்ல, மனிதர் என்பது தெரிகிறது. இயேசுவின் இறுதி விருந்தில் காணப்படும் மேரி மேத்தலினை, இயேசு திருமணம் செய்தார் என்பதும், அவர்களின் வாரிசு இன்று வரை வாழ்ந்து வருகின்றனர் என்றும், ராபர்ட் லாங்டன் விளக்குகிறார். புனிதக் கோப்பைக்கான ரகசியமான கர்த்தரின் வாரிசை, அவர்கள் கண்டுபிடித்தாரா இல்லையா என்பது நாவலின் கிளைமாக்ஸ். இயேசுவுக்கு வாரிசு உண்டு என்ற ஒற்றை புனைவை வைத்துக்கொண்டு, நேர்த்தியான கதையை எழுதியுள்ளார் டான் பிரவுன். வரலாற்று ரீதியான சம்பவங்களும், நிகழ்காலமும் பின்னிப் பிணைந்திருப்பதால், எந்த நெருடலும் இல்லாமல் கதை நகர்கிறது. புதிர் விளையட்டு, குறுக்கெழுத்து, கணித மர்மங்கள், சங்கேத மொழிகள் இவற்றின் மூலம் கதையை நகர்த்தினாலும், மற்றொருபுறம், தெய்வீக சமத்தன்மை, ஆண் பெண் சமநிலை போன்ற தத்துவங்கள் மூலம் நாவலை மேலும் அழகூட்டி உள்ளார். நாவலின் மற்றொரு சிறப்புத்தன்மை, மொழிபெயர்ப்பிலும் குன்றாத அதன் வேகம், மொழிபெயர்ப்பு மிகவும் அபாரம். குறுக்கெழுத்துப் போட்டியின் வெற்று கட்டங்களின் காலி இடத்தைப் போல், அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆவல் இயல்பாக ஏற்படுகிறது. இதுதான் இந்த புத்தகத்தின் வெற்றிக்கு அடிப்படை. இயேசு மீதான புனைகதை, மர்மம், நேர்த்தியாக பின்னப்பட்ட கதை என, மூன்று கோணத்தில் இந்த நூல் தனித்து நிற்கிறது. -அ.ப. இராசா. நன்றி: தினமலர், 19/7/2015.