பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்
பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள், வெ. தமிழழகன், விவேக் எண்டர்பிரைசஸ், பக். 176, விலை 125ரூ.
படித்து பணியில் உள்ள பெண்களுக்குக்கூட சட்டக் கண்ணோட்டம் இல்லாத இந்த நாளில், பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் பற்றிய நூல்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. பெண்களுக்கான வாழ்வுரிமைச் சட்டங்கள், பணிப் பாதுகாப்புச் சட்டங்கள், சொத்துரிமைச் சட்டங்கள், பாலியல் வன்முறைச் சட்டங்கள், தலித் மகளிருக்கான சட்டங்கள் என, ஏராளமாக வந்துள்ளன. இந்த நூலில் இஸ்லாமிய திருமணச் சட்டங்கள் உள்ளிட்ட, 19 தலைப்புகளில் பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் பற்றி எழுதப்பட்டிருந்தாலும், குடும்ப வன்முறைச் சட்டம் பற்றிய தகவல்களே அதிகமாக உள்ளன. இதை ஒரு முழுமையான கையேடு என்று சொல்லுமளவிற்கு பல சட்டங்கள், அரசியலமைப்பு தரும் பாதுகாப்புகள், இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் தரும் பாதுகாப்பு மற்றும் பணியிட பாதுகாப்புச் சட்டங்கள் போன்றவை ஆதாரத்துடன் குறிப்பிடப்படவில்லை. அடுத்த பதிப்பிலாவது இவற்றை அடக்கி முழுமையான கையேடாக வெளியிடலாம். -பின்னலூரான். நன்றி: தினமலர், 19/7/2015.