தங்கர் பச்சான் கதைகள்

தங்கர் பச்சான் கதைகள், உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 210ரூ.

இருக்கிற கடவுள்களும், இனி வரப்போகும் கடவுள்களும் கைவிட்ட தங்கர்பச்சானின் மனிதர்கள். தங்கர்பச்சானின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெள்ளை மாடு வெளிவந்த போது முந்திரித் தோட்டத்து மனிதர்களின் வாழ்வியலை அவ்வளவு நகாசுத்தன்மையுள்ளதாக இல்லாமல் வெளிப்பட்டிருப்பதாக ஒரு விமர்சனம் வந்தது. பின் நவீனத்துவ எழுத்து தீவிரமாக இருந்த காலகட்டம் அது. பின் நவீனத்துவக் காலகட்டத்தில் கலை அம்சங்களும் நாகாசுத்தன்மையும் கூட அவலட்சணமே. காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் விவரிப்பில் இலக்கண நேர்த்தியோ நகாசோ எதிர்பார்ப்பது ஒரு நாகரீக சமூகமாகாது. அந்தக் குற்றச் சாட்டுபோல் அக்கதைகள் இல்லை. பசியின் கோரம் அடுப்புக்குத் தெரியாது. தீவிரப் பிரச்சினைக்கு நகாசு தெரியாது. தங்கர்பச்சானின் கதாபாத்திரங்கள் பின் நவீனத்துவம் கொண்டாடும் விளிம்பு நிலை மனிதர்களே. விவசாயக் கூலிகள், சம்சாரிகள், கரும்புத்தோட்டத் தொழிலாளர்கள், வேதனையிலேயே உழன்று கொண்டிருக்கும் பெண்கள் எனலாம். கொம்புக் கயிறு இல்லாத மாடு அவலட்சணமாக இருப்பதுபோல் அவலட்சனமான விளிம்பு நிலை மக்கள் இவருடையது. குடிமுந்திரி கதையில் முந்திரி மரத்தின் மீது ஏறி நின்று நெய்வேலி சுரங்க கட்டிடங்களை, புகைபோக்கிகளைப் பார்க்கும் சிறுவர்கள்போல தங்கர்பச்சான் தோளில் ஏறி நின்று வாசகர்கள் கடலூர் மக்களின் வாழ்வியலைப் பார்க்க முடிகிறது. இதில் இவர் கையாளும் மொழி உணர்ச்சிப்பிழம்பான கதை சொல்லல் மொழியாகும். அந்த பாதிப்பே அவரின் திரைப்பட மொழியில் பல சமயங்களில் உணர்ச்சிமயமான காட்சி அமைப்புகளால் பாதிப்பு ஏற்படுத்தி பலவீனமாக்குகிறது. திரைத் தொழில்நுட்பம் தீவிர இலக்கியத்திலிருந்து பிறந்தது என்பதையொட்டிய அவரின் காமிரா மொழியும், சொல்லும் தன்மையும் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளன. முந்தைய மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல் தொகுப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த தங்கர்பச்சான் கதைகள் தொகுப்பு. இக்கதைகளில் பெரும்பான்மையானவை இலக்கியப் பத்திரிகைகளில் வந்தவை. இலக்கியப் பத்திரிகைகளில் எழுதுகிற குற்ற உணர்வு பலருக்கு உண்டு. ஆனால் அதைப் பெருமிதத்தோடு இவர் சொல்கிறார். திரைப்படக் கலைஞனாக வாழ்க்கை வீணாகிவிட்டது என்று இவர் தரும் வாக்குமூலம், இலக்கிய இதழ்களில் கதைகள் எழுதுகிறவனுக்கு ஆறுதல் தருகிறது. இலக்கியப் பிரதிகளைத் திரைப்படங்களாக்குகிற இவரின் முயற்சி இலக்கியத்தளத்தில் இவருக்கு இருக்கும் அக்கறையைக் காட்டுவதாகும். கல்வெட்டு என்ற சிறுகதையின் தனலட்சுமி அழகி ஆனாள். தலைகீழ் விகிதங்கள் முதல் ஒன்பது ரூபாய் நோட்டு அம்மாவின் கைபேசி வரை நாவல்கள் படங்களாகியிருக்கின்றன. மரபு ஒரு சுமையாக இல்லாமல் ஒரு வரமாகவோ, மகிழ்ச்சிக்குரிய விசயமாக பழக்க வழக்கங்களில், சடங்குகளில் மிச்சமிருப்பதை இவரின் கதைகளின் போக்கில் தெரிந்துகொள்ள முடிகிறது. முந்திரிக்காடு காலகாலமான சடங்குகளைத் தன்னுள் வைத்துக் கொண்டிருக்கிறது. சடங்குகளும் விதியும் இவரின் கதை முடிவுகளை சில கதைகளில் சாதாரணமாக்கிவிடுகின்றன. இவரின் பெண் கதாபாத்திரங்கள் இந்தச் சடங்குகளுக்குள் அமிழ்ந்து போனவர்கள். மீட்சி இல்லாதவர்கள், கடவுள்களால் கைவிடப்பட்டவர்கள். அம்மாக்களின் முந்தானைக்குள் ஒளிந்து அறிமுகமாகும். இவரின் குழந்தைகளின் விளையாட்டு உலகம் அதிசயமானது. இயற்கையின் மீதான நேசத்தில் உலவும் இவரின் கதாபாத்திரங்கள், கால்நடைகள் உயிர்ப்போடு இக்கதைகளில் உலாவுகின்றன. சாதியின் உக்கிரங்களையும் இவர் காட்டத் தயங்குவதில்லை. நுகத்தடியில் அமிழ்ந்து போகும் கடும் உழைப்பாளிப் பெண்கள் போலில்லாமல் சாதியால் அழுத்தப்பட்ட பிற்பட்ட சாதி சார்ந்தவர்கள் பல வகைகளில் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். கிணற்றுக்குள் சிறுநீர் கழிப்பது போன்ற சிறு சிறு எதிர்ப்புச் செயல்கள் மூலம் இது வெளிப்படுகிறது. பல கதைகளில் சாவைச் சந்திக்கிறோம். தற்கொலைகளில் நிறையபேர் இறந்து போகிறார்கள். எதிர்மறை கதாநாயகர்கள் பணத்துக்காகக் கொலைகளையும் செய்கிறார்கள். சாவு பற்றிய இக்கதைகளில் அதிகம் பேசப்பட்டாலும் சாவு தீர்வல்ல என்பதையும் சொல்கிறார். கிராமம் பற்றிய ஏக்கத்தையும் நகரம் பற்றிய பயத்தையும் இவரின் கதைகள் எழுப்புகின்றன. இத்தொகுப்பில் பல இடங்களில் முன்னுரையிலும் ஆங்கிலக் கல்வியின் வன்முறை, தாய்த் தமிழ்க்கல்வி பற்றி பேசுகிறார். மாற்று வைத்தியத்திற்கான தேவை குறித்துச் சொல்கிறார். கலாச்சாரம் சார்ந்த உடை, உணவு சார்ந்த நிறைய குறிப்புகளைக் காண முடிகிறது. இவையெல்லாம் மாற்றுப் பண்பாடு குறித்த இவரின் அக்கறையைக் காட்டுகின்றன. மண் சார்ந்த கதைகளை நுட்பமான பிரச்சினைகள் ஊடே படைத்திருக்கிறார். மாற்றுப்பண்பாடு குறித்த கேள்விகளுக்குப் பின் இருக்கும் இவரின் அரசியல் குரலையும் இதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். 1993இல் இவரின் முதல் சிறுகதை வெளிவந்தது. 10 ஆண்டுகளுக்குப் பின் இந்த மொத்த தொகுப்பு வந்திருககிறது 20 கதைகளுடன். திரைப்படத் துறைப்பணிகளூடே இலக்கியப் பணியும் தொடர்கிறது. நனவோடை உத்தியும், கதைசொல்லியின் பார்வையும், காட்சி ரூப அம்சங்களும் கொண்ட இக்கதைகள் முந்திரிக்காட்டு மனிதர்களின் மனச்சாட்சியின் குரலாக அமைந்துள்ளன. நன்றி: 1/5/2014, உயிர்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *